மத்திய அரசு, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்களவையில் கொண்டு வந்த 2025-ஆம் ஆண்டு வருமானவரி மசோதாவை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, அந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் ஆய்வுக்குப் பிறகு பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டிருப்பதே குறிப்பிடத்தக்கது. இப்போது, அந்த பரிந்துரைகளைச் சேர்த்துப் புதுப்பிக்கப்பட்ட புதிய வருமானவரி மசோதா, வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 11, 2025) மக்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிப்ரவரி 13, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்ட அசல் மசோதா, அதே நாளில் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. ஆறு மாதங்கள் நீடித்த ஆய்வுக்குப் பிறகு, குழு தனது அறிக்கையை ஜூலை 22, 2025 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், பல தேவையற்ற விதிகளை நீக்கவும், சட்டத்தின் மொழியை எளிமைப்படுத்தவும், பொதுமக்களுக்கு புரியும் வகையில் சட்டத்தை வடிவமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த மசோதா 6 தசாப்தங்களாக பழமையான 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும். இந்த மசோதா 6 தசாப்தங்களாக பழமையான 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தை மாற்றும். பாஜக எம்பி பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு அதை மறுஆய்வு செய்த பிறகு பல திருத்தங்களைச் செய்துள்ளது. புதிய வருமான வரி மசோதா பற்றிய மிகப்பெரிய கேள்வி அடுக்குகள் பற்றியது.
புதிய மசோதாவில் வரி அடுக்குகளை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று வருமான வரித் துறை தெளிவுபடுத்தியிருந்தது. வருமான வரித் துறையின் கூற்றுப்படி, புதிய மசோதாவின் நோக்கம் மொழியை எளிமைப்படுத்துவதும் தேவையற்ற விதிகளை நீக்குவதும் ஆகும்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் எழுப்பிய கூச்சல் மற்றும் குழப்பத்தின் மத்தியில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மசோதாவை வாபஸ் பெற அவையின் ஒப்புதலைக் கோரினார். ஒப்புதல் கிடைத்ததும், அசல் மசோதா திரும்பப் பெறப்பட்டது.
மேலும், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியைத் தவறவிட்டவர்களும், எந்த அபராதமும் இல்லாமல் TDS பணத்தைத் திரும்பப் பெறலாம் என்பதே தேர்வுக்குழுவின் முக்கிய பரிந்துரைகளில் ஒன்று. இது, வரி செலுத்துவோருக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.