உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த கோயில் நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி ஜனவரி 22-ஆம் தேதி பிரான பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தார்.


நவீன இரும்பு, எஃகு அல்லது சிமெண்ட் ஆகியவை எதுவும் இல்லாத வகையில் 380 தூண்களும் முற்றிலுமாக கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் திறக்கப்பட்டிருக்கும் ராமர் கோயில் கருவறையில் இருக்கும் குழந்தை ராமர் சிலையின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து மத்திய அரசின் mygovindia என்ற எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 






ஒவ்வொரு ராம் நவமியன்று நண்பகல் நேரத்தில் குழந்தை ராமர் நெற்றியில் சூரிய கதிர்கள் விழும் வகையில் கண்ணாடி மற்றும் லென்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுசூழலுக்கு எந்த விதமான பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பேட்டரிகளோ மின்சாரமோ பயன்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 






குழந்தை ராமர் சிலை மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒருபுறம் கருடனும் மற்றொரு புறம் ஆஞ்சநேயரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 






2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான கருப்பு கிரானைட்டில் இருந்து செதுக்கப்பட்டது இந்த புனிதமான தலைசிறந்த படைப்பு. இந்த கருப்பு கிரானைட் கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 






ராமரின் தலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கிரீடம் வட இந்திய பாரம்பரியத்தில் மஞ்சள் தங்கம் கொண்டு (yellow gold) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணிக்கங்கள், மரகதம் மற்றும் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு,  மையத்தில் சூர்ய நாராயனரின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. கிரீடத்தின் வலது பக்கத்தில், முத்து இழைகள் நெய்யப்பட்டிருக்கின்றன. இதன் எடை 1.7 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.






ராமர் சிலையின் நெற்றியில் உள்ள வெள்ளை-சிவப்புத் திலகம் வைரம் மற்றும் மாணிக்கங்களால் உருவாக்கப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்தியில் 3 கேரட் கொண்ட இயற்கை வைரம் உடன் சுற்றி சிறிய வைரம் சேர்த்து சுமார் 10 கேரட் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பர்மாவில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூபி கற்களால் சிவப்பு திலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


அருண் யோகிராஜ் என்பவர் தான் இந்த குழந்தை ராமர் சிலையை வடிவமைத்தவர். இவர் 5 ஆம் தலைமுறை சிலை வடிவமைப்பாளர் ஆவர். டெல்லியில் சுமார் 30 அடி உயரமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையும் கேதார்நாத்தில் 12 அடி உயரமுள்ள ஆதி சங்கராச்சாரியர் சிலையும் வடிவமைத்தவர் அருண் யோகிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.