Ayodhya Ram Idol: இணையத்தில் வைரலாகி வரும் வெள்ளை பளிங்கு சிலை, அயோத்தி ராமர் கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுவப்படும் என கூறப்படுகிறது.


அயோத்தி ராமர் கோயில்:


பெரும் பொருட்செலவில் அயோத்தியில் கட்டடப்பட்ட, பால ராமர் கோயில் குடமுழுக்கு விழா அண்மையில் நடந்து முடிந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டின் முக்கிய பிரமுகர்கள் சுமார் 7000 பேர் பங்கேற்றனர். கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோயில் கருவறையில் நிறுவப்பட்டு இருந்த, கருங்கல்லால் செய்யப்பட்டு இருந்த ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டு இருந்த துணி விலக்கப்பட்டது. தொடர்ந்து, ஆரத்தி வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,  அயோத்தி ராமர் கோயிலுக்கு என செய்யப்பட்ட மற்றொரு சிலையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதையும் படிங்க: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட் இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி


வெள்ளை பளிங்கில் ராமர் சிலை:


அயோத்தி ராமர் கோயில் கருவறையில் நிறுவுவதற்கு 3 சிலைகள் வடிவமைக்கப்பட்டன. அவை இறுதி வடிவம் பெற்ற பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பின் அடிப்படையில் தான், மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞரால் செய்யப்பட்ட கருங்க சிலை இறுதி செய்யப்பட்டனது. 51 அங்குலம் உயரமான இந்த சிலை, 5 வயது ராமரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. 150 முதல் 200 கிலோ வரையிலான எடைகொண்ட அந்த சிலையில், விஷ்ணுவின் 10 அவதாரங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. நூற்றாண்டுகள் பழமையான கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலை, குறைந்தபட்ச பராமரிப்பு பணிகள் மூலமே 1000 ஆண்டுகளை கடந்தும் நிலைத்து நிற்கும் என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, ராமர் கோயிலுக்காக ராஜஸ்தானைச் சேர்ந்த சிற்பியால், வெள்ளை பளிங்கு கல்லில் செதுக்கப்பட்ட பால ராமரின் சிலையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வட இந்தியா பாணியில் உருவாக்கப்பட்டடுள்ள இந்த சிலை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.






ராஜஸ்தான் சிற்பி வடித்த சிலை:


ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல சிற்பியான சத்யநாராயன் பண்டே என்பவர் தான், இந்த பளிங்கு சிலையை வடிவமைத்துள்ளார். சிலையை முழு உயரத்தைச் சுற்றியுள்ள வளைவில்,  விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. கைகளில் தங்கத்தாலான வில் மற்றும் அம்பின் வடிவம் இடம்பெற்றுள்ளது. மேலும், அந்த பளிங்கிலேயே தெய்வத்தை அலங்கரிக்கும் நகைகள் மற்றும் ஆடைகள்  வடிக்கப்பட்டு இருப்பது, சிற்பியின் கைவினைத்திறனைக் காட்டுகிறது. தற்போது வரை இந்த சிலை கோயில் நிர்வாகத்திடம் தான் இருப்பதாகவும், முழுமையான கட்டுமான பணிகள் முடிந்த பிறகு இந்த சிலையும் அயோத்தி ராமர் கோயிலின் ஏதேனும் ஒரு பகுதியில் நிறுவப்படும் என்றும் கூறப்படுகிறது.