தன் அரசைப் பற்றி பாசிட்டிவ்வாக எழுதும் செய்தித்தாள்களுக்கு அரசு இலவச விளம்பரம் தரும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜி அறிவித்துள்ளார். தனது அரசைப் பற்றி நெகட்டிவ்வாக எழுத வேண்டாம் எனவும் பாசிட்டிவ் தகவல்களை மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் கொடுக்கும்படியும் மம்தா கூறியுள்ளார்.அது உறுதி செய்யப்பட்டவுடம் செய்தித்தாளுக்கான அரசின் விளம்பரம் வந்துசேரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தங்களது செய்தித்தாளுக்கு விளம்பரமே கிடைப்பதில்லை என உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய கருத்துக்கு மம்தா இவ்வாறு பதில் அளித்துள்ளார். இதனை பாரதிய ஜனதாவினர் தங்களது பக்கத்தில் பகிர்ந்து பகடி செய்து வருகின்றனர்.
மம்தா பானர்ஜி, தேசிய அளவில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக தன்னை முன்னிறுத்தும் வகையில் காய் நகர்த்தி வருகிறார். 136 வருட பாரம்பரிய காங்கிரஸ் கட்சி தற்போது கட்சிக்குள் அதிருப்தி, தேர்தல்களில் தொடர் தோல்விகள், பாஜகவை எதிர்த்து வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இன்மை போன்றவற்றால் கட்சியை கை கழுவும் மூத்த தலைவர்கள் என தள்ளாடி வருகிறது. இதனைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்க முயற்சிக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்கு ஏற்றார் போல் முன்னர் பாஜகவில் இணைந்து வந்த காங்கிரஸ் கட்சியினர் தற்போது திரிணாமுல் காங்கிரசை நோக்கி படையெடுக்கின்றனர். மேகாலயாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் திரிணாமுலுக்கு தாவியுள்ளனர்.
அசாமில் அகில இந்திய காங்கிரஸ் மகளிரணி முன்னாள் தலைவர் சுஷ்மிதா தேவியும் மம்தா கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அதற்கு கை மேல் பலனாக அவருக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளது. இது தவிர கோவா, ஹரியானா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்களும் மம்தாவுடன் இணைந்திருக்கின்றனர். எனினும் ஒரு மாநில வெற்றியோ சிறு மாநிலங்களில் பெறும் வெற்றியோ நாட்டை ஆள போதாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.