இணையம் வந்து விட்ட பிறகு தனி நபர் தொடங்கி குறிப்பிட்ட விஷயம் வரை அனைத்தும் நம் செல்போன்கள் மூலம் தகவல்களாக வந்து விடுகிறது. ஏ டூ இசட் விஷயங்கள் அனைத்தும் நமக்கு கிடைப்பதால் இணையம் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவருமே கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும். 

  • வைபவ் சூர்யவன்ஷி தான் இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் தான் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதலிடத்தில் உள்ளார். 12 வயதில் ரஞ்சிக் கோப்பையில் அறிமுகமான அவர், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். இவரின் வயது 14 என்பது முக்கியமான விஷயமாகும். 
  • 2வது இடத்தில் பிரியான்ஷ் ஆர்யா உள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய இவர் 2025ம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணிக்காக களமிறங்கினார். ஏப்ரல் 8ம் தேதி சென்னை அணிக்கெதிரான போட்டியில் 39 பந்துகளில் சதமடித்தார். அவ்வளவு தான் நம்ம ஆட்கள் யாருடா இந்த பையன்னு தேடி இருக்கிறார்கள்.
  • மூன்றாவது இடம் பிடித்திருக்கும் அபிஷேக் சர்மா 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி 141 ரன்கள் குவித்தார். டி20 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர் சையது முஷ்டாக் அலி கோப்பையிலும் 52 பந்துகளில் 148 ரன்கள் குவித்து அசத்தினார். 
  • 4ம் இடத்தில் 2025 ஆம் ஆண்டு CSK அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட U-19 நட்சத்திரங்களில் ஒருவரான ஷேக் ரஷீத் உள்ளார். தோனியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக திகழ்கிறார். 
  • 5ம் இடத்தில் இந்திய மகளிர் அணியின் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளார். 2025ம் ஆண்டு மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இதில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜெமிமாவின் ஆட்டமும், அந்த போட்டி வெற்றிக்கு பின்னால் அவரின் பேட்டியும் யாருடா இந்த பொண்ணு என தேட வைத்தது.
  • 6ம் இடத்தில் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆயுஷ் மாத்ரே உள்ளார். இவர் 19 வயதிற்குட்பட்ட ஆசிய கோப்பையில் இந்திய அணி கேப்டனாக செயல்பட்டார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடி அனைவரையும் அசர வைத்தார். 
  • ஏழாவது இடத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உள்ளார். இவர் இந்தாண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தனது முதல் சதத்தை அடித்தார். இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் சதமடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். 
  • 8ம் இடத்தில் இந்திய அணி வீரர் கருண் நாயர் உள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். 8 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆடிய பிறகு நீக்கப்பட்டார். தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோற்றபோது கிண்டலாக பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
  • ஒன்பதாம் இடத்தில் 2025ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த உர்வில் படேல் இடம் பெற்றிருக்கிறார். இவர்  சையத் முஷ்டாக் அலி கோப்பையில் 31 பந்துகளில் சதம் அடித்ததின் மூலம் பலராலும் இணையத்தில் தேடப்பட்ட நபராக உள்ளார். 
  • 10ம் இடத்தில்  2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற விக்னேஷ் புதூர் இடம் பிடித்துள்ளார். அவர் தனது அறிமுக போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.