புகழ்பெற்ற இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளருமான அன்னா மாணியின் 104ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் கூகுள் டூடுள் மூலம் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளது. 


'இந்தியாவின் வானிலைப் பெண்' என அறியப்படும் அன்னா மாணி 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி கேரளாவில் பிறந்தார். இயற்பியலாளராகவும் வானிலை நிபுணராகவும் அவர் ஆற்றிய பணி இன்று துல்லியமாக வானிலையைக் கணிப்பதற்கு உதவுகிறது.






இந்நிலையில் கூகுளின் இந்த சிறப்பு டூடுலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.


அன்றைய மெட்ராஸின் பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியல் மற்றும் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு அன்னா மாணி ஓராண்டு WCC கல்லூரியில் கற்பித்தார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் முதுகலை படிப்புக்கான உதவித்தொகை பெற்றார்.


நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனின் வழிகாட்டுதலின் கீழ் வைர மற்றும் மாணிக்கம் ஒளியியல் பண்புகள் குறித்த ஆராய்ந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபி படித்தார்.






லண்டனில் படித்த அவர் 1948ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்குத் திரும்பி இந்திய வானிலை ஆய்வு மையத்துக்காக பணியாற்றத் தொடங்கினார். இவர் வளிமண்டலவியல் கருவி மயமாக்கல் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்தார். இவர் சூரிய மற்றும் காற்று ஆற்றல் அளவீடுகள், ஓசோன் அளவீடுகள் ஆகியவற்றை ஆய்வு நடத்தி ஏராளமான ஆய்வேடுகளை வெளியிட்டார்.