இந்தியாவின் மிகவும் முக்கியமான சுற்றுலா தள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அந்த மாநிலத்தில் உள்ள கொச்சி நகரம் அந்த மாநிலத்தின் வருவாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், கூகுள் மேப்பில் கொச்சியை தேடிப்பார்த்தபோது, அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அதிகாரிகள் கண்டறிந்தனர். கூகுள் மேப்பில் கொச்சியின் வடக்கு கடற்கரையில் , நீருக்கடியில் மூழ்கிய தீவு ஒன்று தெரிகிறது. பீன்ஸ் வடிவில் அமைந்துள்ள அந்த தீவு மேற்கு கொச்சியின் பாதி அளவிற்கு இருப்பதாக கூகுள் மேப்பில் தெரிகிறது. ஆனால், தற்போது வரை கடலில் தீவைப்போன்ற எந்தவொரு அமைப்பும் காணவில்லை. இது ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




வரைபடத்தில் உள்ள தோற்றத்தின் அடிப்படையில், இந்த தீவு 3.5 கி.மீ. அகலமும், 8 கி.மீ. நீளமும் கொண்டதாக உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைகழக அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, விசாரணை நடத்திய பின்னரே இவை வெளிக்கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.


கேரள மீன்வள மற்றும் பெருங்கடல் ஆய்வுகள் பல்கலைகழக துணைவேந்தர் ரிஜிஜான், கொச்சின் துறைமுகம் தோண்டப்பட்டதால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதா? என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்ய உள்ளோம். கேரளாவின் தென் பிராந்தியத்தை நோக்கி, கடற்கரை அரிப்பு பிரச்சனை உள்ளது. அதே நேரத்தில் இந்த நிகழ்வுக்கு அதுதான் காரணம் என்றும் கூற முடியாது. இதற்கான காரணங்களை கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது என்றார்.