கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய 22வது கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நேற்று கோலாகலமான கொண்டாட்டத்துடன் நிறைவு பெற்றது. இதில் நடப்புச் சாம்பியனாக இருந்த பலமான பிரான்ஸ் அணியை அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. அதற்கு முன்னதாக போட்டியின் முழு நேரம் முடிவடையும்போது இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் சமநிலையில், இருந்தது, இதன் பின்னர், வழங்கப்பட்ட கூடுதல் நேரம் 30 நிமிடத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களுடன் சமநிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கு உலகம் முழுவதும் உள்ள பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், மெஸ்ஸி உலகக் கோப்பை வென்றதற்கு பாராட்டு தெரிவித்து காங்கிரஸ் எம்பி அப்துல் காலீக் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், "இதயத்தின் மையத்தில் இருந்து வாழ்த்துக்கள். உங்களின் அஸ்ஸாம் இணைப்பிற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் @teammessi" என்று பதிவிட்டு இருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ட்விட்டர் பயனர் ஒருவர், அசாம் இணைப்பா..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி எம்பி அப்துல் காலீக், ஆம், இவர் அசாமில் பிறந்தவர் என்று தெரிவித்தார்.
இதை கண்ட மற்றொரு பயனர், “எஸ் சார், மெஸ்ஸி என்னோட வகுப்புத் தோழர்” என்றும், மற்றொருவர், “உலகக் கோப்பைக்குப் பிறகு, மெஸ்ஸியும் அவரது மனைவியும் அஸ்ஸாமுக்கு வந்தனர்” என்றார். மேலும் ஒருவர் மெஸ்ஸியின் புகைப்படத்தை பகிர்ந்து "நான் அஸ்ஸாமில் பிறந்தேன் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்" என்று நக்கலாக பதிலளித்தார்.
இதையடுத்து மும்பை பாஜக நிர்வாகி ரமேஷ் சோலங்கி தனது ட்விட்டரில், காங்கிரஸ் எம்பி அப்துல் காலில் பதிவிட்டு நீக்கிய ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்.
வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்:
பிரதமர் மோடி வாழ்த்து:
பிரதமர் மோடி தனது வாழ்த்தில், "இது மிகவும் பரபரப்பான கால்பந்து போட்டிகளில் ஒன்றாக நினைவுகூரப்படும்! FIFAWorldCup சாம்பியன் ஆனதற்கு அர்ஜென்டினாவுக்கு வாழ்த்துகள்! போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர். அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸியின் மில்லியன் கணக்கான இந்திய ரசிகர்கள் அற்புதமான வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ளனர்!” இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வாழ்த்து:
அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய வாழ்த்தில், "இது மிகவும் அற்புதமான போட்டி, பிரான்ஸ் அணியின் எம்பாப்வேயின் ஹாட்ரிக் கோலால் இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி எப்போதும் சிறப்புடன் நினைவுகூரப்படும். மேலும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் கோல் கீப்பர் மார்டினஸ்க்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.