எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது. 


அயன் பட பாணியில் வெளிநாட்டு தங்கம் கடத்தல்:


இந்த நிலையில், நாடு தழுவிய அளவில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், 19 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். 


வங்கதேசம் எல்லை வழியாக இந்தியாவிற்குள் தங்கம் கடத்தப்பட்டு, மும்பை, நாக்பூர் (மகாராஷ்டிராவில்), வாரணாசி (உத்தர பிரதேசம்) ஆகிய இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டதாக வருவாய் புலனாய்வு பிரிவு (டிஆர்ஐ) அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இதுகுறித்து டிஆர்ஐ வெளியிட்ட அறிக்கையில், "நேற்றும் நேற்று முன்தினமும் வாரணாசி, நாக்பூர், மும்பை நகரங்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக சாலை மற்றும் ரயில்கள் மூலம் வெளிநாட்டு தங்கத்தை கடத்திய கும்பல் பிடிபட்டுள்ளது.


சேஸ் செய்த அதிகாரிகள்:


நேற்று முன்தினம் மாலை, கொல்கத்தாவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், நாக்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றடைந்தபோது, நாக்பூரை சேர்ந்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 8.5 கிலோ வெளிநாட்டு தங்கத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.


வாரணாசியில் காட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையை தொடர்ந்து மூன்று மணி நேரம் சேஸ் செய்து, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை அதிகாரிகள் கைது செய்தனர். இருவரிடமிருந்தும் 18.2 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. காரின் ஹேண்ட்பிரேக்கிற்கு கீழே உள்ள பகுதியில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டது.


வாரணாசியில் இருந்து ரயிலில் 4.9 கிலோ தங்கத்தை ஏற்றிச் சென்ற குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரை மும்பை பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நடவடிக்கையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5 பேர் மும்பையிலும், இருவர் வாரணாசியிலும், நான்கு பேர் நாக்பூரிலும் கைது செய்யப்பட்டனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதிகரிக்கும் கடத்தல்:


சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை பொறுத்தவரையில், தங்கக் கடத்தல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தங்கக் கடத்தலை தொடர்ந்து ஹெராயின் போன்ற போதை பொருள், வன விலங்குகள், வைரம் ஆகியவற்றின் கடத்தலும் அதிகரித்து விட்டன.