‘பெண்கள்’ தனியாக இனி மசூதிக்கு வரக்கூடாது என்ற ஜமா மசூதியின் விதிக்கு எதிராக டெல்லி ஜமா மஸ்ஜித் இமாமுக்கு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்வாதி மாலிவால், “ஜமா மசூதிக்குள் பெண்கள் நுழைவதைத் தடுக்கும் முடிவு முற்றிலும் தவறானது. ஆணுக்கு எப்படி வழிபட உரிமை இருக்கிறதோ அதே அளவு பெண்ணுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக ஜமா மஸ்ஜித் இமாமுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். இதுபோன்ற பெண்களின் நுழைவைத் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியுள்ளார்.






ஜமா மஸ்ஜித் மக்கள் தொடர்பு அதிகாரி சபியுல்லா கான் கூறுகையில், பெண்கள் நுழைவது தடை செய்யப்படவில்லை, ஆனால் பெண்கள் தனியாக வர முடியாது, மசூதி வளாகம் ஆண்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கும் பெண்களின் "சந்திப்பு மையமாக" மாறுவதைத் தடுக்க மசூதி நிர்வாகத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறினார். 


குடும்பத்துடன் வருவதற்கும், திருமணமான தம்பதிகள் வருவதற்கும் எந்த தடையும் இல்லை. ஆனால், யாரையாவது சந்திப்பதற்காக இங்கு வருவது, அதை ஒரு பூங்காவாக நினைப்பது, டிக்டாக் வீடியோக்களை மசூதிக்குள் உருவாக்குவது, நடனம் ஆடுவது போன்றவற்றை எந்த மத இடமாக இருந்தாலும், அது மசூதியாகவோ, கோயிலாகவோ, குருத்வாராவாகவோ இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கான் கூறினார்.


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


டெல்லியில் குற்றங்களும் குறைந்தபாடில்லை.


முன்னதாக, டெல்லியில் அரங்கேறிய கொடூர கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாள்தோறும் பகீர் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வழக்கின் குற்றம்சாட்டப்பட்டவரான ஆப்தாப் பூனாவாலா, ஜூன் மாதம் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து டெல்லிக்கு 37 பெட்டிகளில் உடமைகளை அனுப்பியுள்ளார். அதற்கு 20,000 ரூபாய் செலவாகியுள்ளது.


டெல்லிக்கு குடிபெயர்வதற்கு முன்பு, பால்கரின் வசாய் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து பொருட்களை இடம் மாற்றுவதற்கு யார் பணம் கொடுப்பது என்பதில் ஆப்தாப்புக்கும் ஷ்ரத்தாவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.


இந்த குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்த காவல்துறை தரப்பு, "ஜூன் மாதத்தில் மரச்சாமான்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக 20,000 ரூபாயை செலுத்த யாருடைய வங்கி கணக்கு பயன்படுத்தப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.


குட்லக் பேக்கர்ஸ் மற்றும் மூவர்ஸ் நிறுவனம் வழியாக பொருள்கள் இடமாற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள பேக்கேஜிங் நிறுவன ஊழியர் ஒருவரின் வாக்குமூலத்தை டெல்லி காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்து கொண்டனர்.


பின்னர், ஆப்தாப் 37 பொட்டலங்களில் உள்ள பொருட்களை வசாய் எவர்ஷைன் நகரில் உள்ள ஒயிட் ஹில்ஸ் சொசைட்டியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து அவரது வீட்டிற்கு மாற்றியது தெரிய வந்தது. 


டெல்லி போலீஸ் குழு ஷர்த்தாவின் சொந்த ஊரான வசாயில் உள்ள மாணிக்பூரில் விசாரணை செய்து வருகிறது. டெல்லி இடம்பெயர்வதற்கு முன்பு,  ஆப்தாபும் ஷர்த்தாவும் அங்குதான் தங்கியிருந்தனர்.


கடந்த 2021ஆம் ஆண்டு, ஷ்ரத்தாவும் ஆப்தாபும் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரின் வாக்குமூலத்தை பெற்று கொண்டனர். அதேபோல, ஆப்தாப்பின் குடும்ப உறுப்பினர்கள் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை மும்பைக்கு அருகிலுள்ள மீரா ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்கள் தங்கியிருந்த உரிமையாளரின் வாக்குமூலத்தையும் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தனர்" என தெரிவித்தது.


விசாரணையின் தொடர்ச்சியாக சிசிடிவி காட்சி வெளியாக அனைவரையும் பதற வைத்தது. அதில், அதிகாலை அப்தான் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை கொண்ட பையை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்துள்ள முதல் காட்சி சிசிடிவி காட்சி இதுவாகும்.