ஒரு காலத்தில் பெண் சிசு கொலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் பெண் சிசு கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கருத்தம்மா திரைப்படம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, பெண் சிசு கொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. 


அதன் விளைவாக, பெண் சிசு கொலை பெரிய அளவில் குறைந்துள்ளது. பெண் குழந்தைகளை ஒரு காலத்தில் சுமையாக கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த சூழல் முற்றிலுமாக மாறி வருகிறது. 


அதன் பிரதிபலிப்பாகவே, பெண் குழந்தைகள் தத்தெடுப்பது அதிகரித்து வந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில், ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, "கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்களை விட பெண் குழந்தைகள் அதிகமாக தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சிறப்பு குழந்தையை தத்தெடுக்க விரும்புவோர் காத்திருக்க தேவையில்லை" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று புதிய தத்தெடுப்பு விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட பிறகு, 580 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர்.


பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தத்தெடுப்பு தொடர்பாக 900 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் இந்த ஆண்டு செப்டம்பர் 23 அன்று புதிய விதிகளை கொண்டு வந்தோம். புதிய விதிகளை மாநிலங்கள் அமல்படுத்திய பிறகு 580 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். 


புதிய விதிகள் கொண்டு வரப்பட்ட பிறகு தத்தெடுக்கப்படாத பெரிய பிள்ளைகளும் தத்தெடுக்கப்பட்டனர். வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் கார்டு வைத்திருப்பவர்களுக்கு சில வயதான குழந்தைகள் கிடைக்கப்பெற்றுள்ளனர். ஏழு நாட்களில், இதுபோன்ற 42 குழந்தைகளை புலம்பெயர் இந்தியர்கள் தத்தெடுத்துள்ளனர்" என்றார்.


ஒரு குழந்தை இப்போது காத்திருக்க வேண்டியதில்லை. தத்தெடுக்கும் பெற்றோர் வேண்டுமானால் காத்திருக்கலாம். தத்தெடுக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள் அதிகமாக இருந்ததால், குழந்தைகள் காத்திருக்க வேண்டியதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


அதுவே கருணை உள்ள சமூகத்திற்கு ஆரோக்கியமான அடையாளம். பெற்றோர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும், ஆனால் குழந்தைகள் காத்திருக்க வேண்டியதில்லை.


2021-22ல் 1,698 பெண்கள் உட்பட 2,991 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். 2020-21 ஆம் ஆண்டில் 1,856 பெண்கள் உட்பட 3,142 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர். 2019-20 ஆம் ஆண்டில் 1,938 குழந்தைகள் உட்பட 3,351 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டனர் என அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன.