காதல் தம்பதியின் திருமணங்கள் பெரும்பாலும் பிரச்னையுடன்தான் முடியும். ஆனால் ஒரு சில நேரங்களில் காதலே சிக்கலாக முடிந்துவிடும். அந்தவகையில் தான் தற்போது ஒரு பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தன்னுடைய காதலரின் வீட்டிற்கே சென்று போராடியுள்ளார். அவர் அப்படி செய்ய என்ன நடந்தது? எதற்காக அப்படி செய்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் மௌரியா. இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையே நீண்ட நாட்கள் காதல் உறவு இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது திடீரென்று சந்தீப் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயித்துள்ளனர். இதை அறிந்த காதலி தன்னுடைய உறுவினர்களை அழைத்து கொண்டு கையில் தாலியுடன் சந்தீப் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் தன்னை உடனடியாக சந்தீப்பிற்கு திருமணம் செய்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். அதற்கு சந்தீப் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த இடத்திலேயே தற்கொலை செய்துகொள்ள போவதாக அப்பெண் மிரட்டியுள்ளார். இதனால் சந்தீப் குடும்பத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பெயரில் வந்த காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி அப்பெண் திரும்பி செல்ல வைத்தனர். மேலும் அவரிடம் புகார் ஒன்றையும் பெற்றுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கோரக்பூர் எஸ்பி கூறுகையில், "சந்தீப் என்பவர் ராம்பூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு அதே சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் காதல் உறவு இருந்துள்ளது. எனினும் பெற்றோர்கள் சந்தீப்பிற்கு வேறு ஒரு பெண்ணிடம் திருமணம் நிச்சயித்துள்ளனர். இதனால் சந்தீப் தன்னை ஏமாற்றியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார்" எனத் தெரிவித்தார்.
மேலும் சந்தீப் தன்னை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தீப் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு வழக்கும் காவல்துறையில் நிலுவையில் உள்ளது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அவர் மீது அப்பெண் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IAB on Covid19: குழந்தைகளுக்கு ஆபத்தா.. பீதியூட்ட வேணாம் - ஐ.ஏ.பி. அறிவுரை!