நாடளவில் 32 ஆயிரம் குழந்தைநல மருத்துவர்கள் இடம்பெற்றுள்ள இந்த அமைப்பு (இண்டியன் அகடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்-ஐ.ஏ.பி) இதுதொடர்பாக பொது அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அளவுக்கு மருத்துவர்கள் மத்தியிலும் தவறான கருத்து வலுவாக ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.


நாடு முழுவதும் பெரியவர்களுக்கு கொரோனா தாக்குவதைப் போலவே சிறார்களுக்கும் தொற்று ஏற்படுகிறது; ஆனால் பெரியவர்களுக்கு அது கடுமையான தாக்கத்தை உண்டாக்குகிறது; சிறுவர்களுக்கோ 90 சதவீதம்வரை இலேசானதாகவும் அறிகுறி இல்லாமலும் கொரோனா தாக்கம் காணப்படுகிறது என்கிறது ஐ.ஏ.பி.
பொது மருத்துவர்களிடையே மட்டுமல்ல குழந்தைநல மருத்துவர்கள் மத்தியிலும்கூட, மூன்றாம் அலையின்போது குழந்தைகளுக்கு முதல் இரண்டு அலைகளைவிட கூடுதல் பாதிப்பை உண்டுபண்ணும் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வாதத்தை சரி என நிறுவுவதற்கு அவர்களிடம் எந்த முகாந்திரமும் இல்லை என்பது இந்திய குழந்தைநல மருத்துவர் அமைப்பின் அழுத்தமான கருத்தாகும்.


ஐ.ஏ.பி.யின் முன்னாள் தலைவரும் மும்பையைச் சேர்ந்தவருமான பாகுல் ஜெயந்த் பரேக், தி டெலிகிராப் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில், “ நாடு முழுவதும் சுற்றிவந்துகொண்டு இருக்கும் தவறான தகவல்களை மறுக்கவும் அதன் மூலம் மக்கள் தவறான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் வந்துவிடக்கூடாது எனத் தடுக்கவும் விரும்புகிறோம். ஐ.ஏ.பி.யின் இந்த அறிவுறுத்தல் உலக அளவிலான அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.


முதல் அலையின்போது நாள்பட்ட நோயுள்ளவர்களுக்கும் முதியவர்களுக்கும் கூடுதல் நலிவு கொண்டவர்களுக்கும் இரண்டாம் அலையின்போது நடுக்கட்ட வயதினருக்கும் அதிக அளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது உலாவும் ஒரு கருத்து. இன்னொன்று இதுவரை குழந்தைகளைத் தவிர மற்றவர்களுக்கு பாதிப்பு வந்துவிட்டது; அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்; அதனால், இனி தடுப்பூசி எடுக்காத குழந்தைகளுக்கே கொரோனா பாதிப்பு உண்டாகும் என்பது மற்றொரு கருத்து.  


இன்னும் பல ஊகமான கருத்துகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியிருக்கிறது; அவை பெற்றோரிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார், ஐ.ஏ.பி.யின் கொரோனா குழு உறுப்பினர்களில் ஒருவரான தன்யா தர்மபாலன். “இந்த அலையிலும் ஏராளமான குழந்தைகள் தொற்றுக்கு ஆளானதைப் பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக எல்லாரும் பாதிக்கப்படும்போது ஒட்டுமொத்த குழந்தைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதாகவே கருதமுடியும். மிகவும் குறைந்த குழந்தைகள்தான் மிதமான, தீவிரமான பாதிப்புக்கு ஆளானார்கள். ஒட்டுமொத்தமாக மிக அதிகமாக தொற்று அதிகரிக்கும்போது மிதமான, தீவிரமான பாதிப்பை குழந்தைகளிடமும் பார்க்கமுடியும்” என்கிறது, இந்திய குழந்தைநல மருத்துவர் அமைப்பு- ஐ.ஏ.பி. 


மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்கிற கருத்து பரவலாக பரவி வரும் நிலையில், இந்த விளக்கம் பெற்றோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.