காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகுவதற்கு முன்பு பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்தார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக  பதவி விகித்தார்.


பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையே சமூகமான போக்கு நிலவவில்லை என கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியானது.


பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் குலாம் நபி ஆசாத்:


குறிப்பாக, பாஜகவுடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவுபெற்றதையொட்டி பேசிய பிரதமர் மோடி, கண் கலங்கினார். இப்படிப்பட்ட சூழலில், கடந்தாண்டு, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் அனுபவம் இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் கூறி கட்சியில் இருந்து விலகினார்.


இதை தொடர்ந்து, ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சியை தொடங்கினார். அவரை பாஜக கட்டுப்படுத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றனர்.


சர்ச்சையில் சிக்கிய குலாம் நபி ஆசாத்:


இந்த நிலையில், குலாம் நபி ஆசாத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த 14ஆம் தேதி, தோடா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களாகத்தான் இருந்தனர் என கூறியுள்ளார்.


"காஷ்மீரின் உதாரணம் எங்களிடம் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இஸ்லாமியர் ஒருவரும் இல்லை. காஷ்மீரி பண்டிட்கள்தான் இஸ்லாமிற்கு மதம் மாறியுள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே மிக பழமையான மதம் இந்து மதம். 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் இஸ்லாம் தோன்றியது.


இஸ்லாம் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும். 10 முதல் 20 பேர் முகலாயப் படையை சேர்ந்தவர்களாக இருந்திருப்பார்கள். மீதமுள்ளவர்கள் இந்து-சீக்கியர்களாக இருந்து மதம் மாறியுள்ளனர். இந்துக்கள், இஸ்லாமியர்கள், தலித்துகள், காஷ்மீரிக்கள் என அனைவருக்காகவும் நாங்கள் அரசை கட்டியெழுப்பியுள்ளோம். 


"மதம் மாறுவதற்கு முன்னர் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்கள்தான்"


இது, எங்கள் நிலம், வெளியில் இருந்து யாரும் இங்கு வரவில்லை. உங்களுக்கு எட்டாத பல விஷயங்களை நாடாளுமன்றத்தில் நான் பார்த்திருக்கிறேன். சிலர் வெளியில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று சக எம்.பி ஒருவர் சொன்னார். நான் மறுத்தேன். நமது இந்துஸ்தானில் இஸ்லாம் தோன்றி வெறும் 1500 ஆண்டுகள் தான் ஆகிறது. 


இந்து மதம் மிகவும் பழமையானது. முகலாயர்களின் காலத்தில் அவர்கள் ராணுவத்தில் இருந்தபோது அவர்களில் 10-20 பேர் வெளியில் இருந்து வந்திருக்க வேண்டும். மீதமுள்ளவர்கள் அனைவரும் இந்தியாவில் இந்துவிலிருந்து முஸ்லீமாக மாறியுள்ளனர். அதற்கு நமது காஷ்மீர் ஒரு உதாரணம்.
 
600 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இருந்த முஸ்லிம் யார்? அனைவரும் காஷ்மீரி பண்டிட்டுகள்தான். அனைவரும் இஸ்லாத்திற்கு மாறியவர்கள். எனவே, அனைவரும் இந்த மதத்தில் பிறந்தவர்கள்" என்றார்.