காங்கிரஸ் மூத்த தலைவரும், ஜி-23 அதிருப்தி குழுவின் முக்கிய தலைவருமான குலாம் நபி ஆசாத் இன்று கட்சியில் இருந்து விலகினார். ராகுல் காந்தி முதிர்ச்சியற்று செயல்பட்டதாக விமர்சித்த அவர், கட்சியில் உள்ள ஆலோசனை அமைப்பை அவர் அழித்ததாக குற்றம்சாட்டி உள்ளார்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தகவல்களை கீழே காண்போம்:


துரதிர்ஷ்டவசமாக, ராகுல் காந்தி அரசியலுக்கு வந்த பிறகு, குறிப்பாக ஜனவரி 2013க்குப் பிறகு, அவர் உங்களால் (சோனியா காந்தி) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டபோது, ​​முன்பு இருந்த முழு ஆலோசனை அமைப்பும் அவரால் அழிக்கப்பட்டது.


செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்கள் முன்பு அவசர சட்டத்தின் நகலை கிழித்தது அவரது (ராகுல் காந்தி) முதிர்ச்சியின்மைக்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்று.


இந்த குழந்தைத்தனமான நடத்தை, பிரதமர் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. 2014 இல் ஐக்கிய முற்போக்கு அரசின் தோல்விக்கு இந்த ஒரே ஒரு நடவடிக்கையானது, பிற காரணங்களை காட்டிலும் முக்கிய பங்காற்றியது. வலதுசாரி சக்திகள் மற்றும் சில நேர்மையற்ற கார்ப்பரேட்களின் கலவையான அவதூறு மற்றும் பிரச்சாரத்தை காட்டிலும் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான போக்கு தோல்விக்கு மிக முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.


2014ல் இருந்து உங்களின் தலைமையிலும், அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அவமானகரமான முறையில் தோல்வியடைந்துள்ளது. 2014 - 2022க்கு இடையில் நடைபெற்ற 49 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்துள்ளது. 
நான்கு மாநிலத் தேர்தல்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்று ஆறு நிகழ்வுகளில் கூட்டணியில் ஆட்சிக்கு வர முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்று காங்கிரஸ் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. மேலும் இரண்டு மாநிலங்களில் ஆளும் கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது.


கோபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகு, கட்சிக்காக தங்கள் உயிரைக் கொடுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் செயற்குழுக் கூட்டத்தில் அவமதிக்கப்பட்டார்கள். நீங்கள் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றீர்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக இன்றும் நீங்கள் தொடர்ந்து அந்த பதவியை வகித்து வருகிறீர்கள். 


இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், ஐக்கிய முற்போக்கு அரசாங்கத்தின் ஒருமைப்பாட்டைத் தகர்த்த 'ரிமோட் கண்ட்ரோல் மாடல்' இப்போது இந்திய தேசிய காங்கிரஸை தகர்த்து வருகிறது. நீங்கள் பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கும் போது, ​​அனைத்து முக்கியமான முடிவுகளையும்  ராகுல் காந்தியோ அல்லது அதைவிட மோசமாக அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்கள் (தனிப்பட்ட உதவியாளர்கள்) எடுக்கின்றனர்.