கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்து அவரின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிபோட்டது. பிரதமர் மோடி குறித்து அவர் அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றம் அவரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி நீக்கம் செய்தது.


ராகுல் காந்திக்கு ஆதரவாக ஜெர்மனி கருத்து:


இந்த விவகாரம் இந்தியா மட்டும் இன்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச ஊடகங்களில் ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராகுல் காந்திக்கு ஆதரவாக ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. 


செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக பேசிய ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இந்திய எதிர்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து அறிவோம். எங்களுக்கு தெரிந்தவரை, தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் நிலையில் ராகுல் காந்தி இருக்கிறார்.


இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா என்பதும், தகுதி நீக்கம் செய்வதற்கு ஏதேனும் அடிப்படை உள்ளதா என்பதும் பிறகுதான் தெளிவாக தெரியவரும். நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளின் தரநிலைகள் இந்த வழக்கில் பொருந்தும் என்று ஜெர்மனி எதிர்பார்க்கிறது" என்றார்.


மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதிலடி:


இதை கடுமையாக சாடியுள்ள மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, "வெளிநாடுகளின் தலையீட்டால் இந்திய நீதித்துறை பாதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெளிநாடுகளின் ஆதிக்கத்தை இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது. ஏனென்றால், நமது பிரதமர்  நரேந்திர மோடி" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


 






முன்னதாக, ராகுல் காந்திக்கு ஆதரவாக அமெரிக்கா கருத்து தெரிவித்திருந்தது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், "ராகுல் காந்தி வழக்கை கவனித்து வருகிறோம்.


கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக விழுமியங்களுக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஈடுபடுகிறோம். சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மதிப்பளிப்பது எந்தவொரு ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும்" என்றார்.


2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என பேசியிருந்தார். இந்த பேச்சின் காரணமாகதான், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.