காஸியாபாத்தில் உள்ள அஜ்னரா இண்டக்ரிட்டி ஹவுசிங் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் ஒன்றில் 6 வயது சிறுமியை ஜெர்மன் ஷெப்பர்ட் ஒன்று கடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இது செல்லப்பிராணிகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக நடைமுறைகள் குறித்து மீண்டும் கவலையை அளிக்கிறது. இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சிகள் இந்த சம்பவத்திற்கு பிறகு 3 நாட்கள் கழித்து இணையத்தில் வைரலாகி கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. 


சிசிடிவி காட்சிகளில் வெளியான வீடியோக்களில், ஆறு வயது சிறுமி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் அங்கிருந்தது. அப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அந்த வளர்ப்பு நாயானது எகிறி சிறுமியின் கை கடித்தது. அந்த நேரத்தில் நாயின் உரிமையாளரால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. 


இதையடுத்து, 6 வயது சிறுமியின் தாயும் ஒரு பாதுகாவலரும் உடனடியாக விரைந்து சிறுமியை பாதுகாத்தனர். 






அந்த வளர்ப்பு நாய் தாக்கியபோது நாய் முகவாய் எதுவும் அணிந்திருக்கவில்லை என்றும், அது தனது ஒரு வயது மகனையும் தாக்கியதாகவும், அது கேமராவில் பதிவாகவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து நந்திகிராம் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.


புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நாயின் உரிமையாளர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 289ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 






இதுகுறித்து சொசைட்டி செயலாளர் வெங்கடேசன் கூறுகையில், "நகராட்சியின் வழிகாட்டுதல்களை மீறி நாய்களை வளர்ப்பதில் பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். பொது இடங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும் போது, ​​நாயின் வாயில் முகமூடியை கட்டாயம் அணிய வேண்டும், ஆனால் மக்கள் அதை செய்வதில்லை. இதனால் நாயிக்கு எதாவது தீங்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். இதன் காரணமாக, குழந்தைகள் மற்றும் பொதுமக்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் ” என தெரிவித்தார். 


மேலும், அந்த அப்பார்ட்மெண்ட் தலைவர் தர்மேந்திர சவுத்ரி கூறுகையில், ”இந்த பிரச்சனையால் முழு நகரமும் அதிர்ச்சியில் உள்ளது. நகராட்சி நிர்வாகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோன்ற பல சம்பவங்களுக்குப் பிறகும்  மக்களிடையே அதிகளவிலான அலட்சியங்கள் உள்ளது. அப்பார்ட்மெண்ட் நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து உறுதியான நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.