ஊடக உலகமே இன்று உச்சரிக்கும் ஒரே பெயர் ஜார்ஜ் சோரஸ். அரசாங்கமும் கொந்தளிப்புடன் விமர்சிக்கும் பெயரும் அதேதான். ஒரே நாளில் அப்படி என்னதான் செய்தார் அந்த ஜார்ஜ் சோரஸ்? யார் அந்த ஜார்ஜ் சோரஸ் என்ற கேள்விகள் எழுகிறதா?


காரணம் என்ன?


அதானியின் வணிக சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை உலுக்கி இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டதுதான் சர்ச்சைக்குக் காரணம்.


1. 92 வயதான பெரும் பணக்காரர் ஜார்ஜ் சோரஸ் ஒரு கொடையாளர். அவர் வளமான யூத குடும்பத்தில் பிறந்தவராவார். 17 வயதில் அவர் ஹங்கேரியை விட்டு வெளியேறினார். நாஸிகள் ஹங்கேரிக்கு வரவே அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். அவரது குடும்பம் 1947ல் லண்டன் வந்தது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் அவர் தத்துவம் பயின்றார்.


2. படிப்புக்குப் பின்னர் அவர் லண்டன் மெர்சண்ட் வங்கியில் சேர்ந்தார். 1956ல் அவர் நியூயார்க் வந்தார். அங்கே ஐரோப்பியன் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராக இருந்தார்.


3. பங்கு முதலீடுகளில் மிகப்பெரிய ஜாம்பவானானர். அவர் ஒரு பில்லியன் டாலர் லாபம் சம்பாதித்து வணிக உலகையே தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார்.


பில்லியனர்:


4. சோரஸிடம் 8.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவர் ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷனின் நிறுவனராகவும் உள்ளார். இந்த அமைப்பு கருத்து சுதந்திரம், ஜனநாயகம், வெளிப்படைத்தன்மையைப் பேணும் தனிநபர்கள், குழுமங்களுக்கு நன்கொடை வழங்குகிறது.


5. பனிப்போர் முடிந்த பின்னர், சோரோஸ் செக்கோஸ்லோவாகியா, போலந்து, ரஷ்யா, யுகோஸ்லேவியா போன்ற நாடுகளில் தனது நிறுவனத்தின் கிளைகளைப் பரப்பினார். இந்த நூற்றாண்டு துவக்கத்தில் அதன் கிளைகள் 70 நாடுகளில் பரவியிருந்தன. அவர் அரசியல் ஆர்வலராகவும் இருக்கிறார். பராக் ஒபாமா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஆதரித்தார். ஹிலாரி, ஜோ பைடனையும் அவர் ஆதரித்தார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கும், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் எதிரான சிந்தை உடையவர். அதேபோல் துருக்கி அதிபர் எர்டோகனையும் எதிர்ப்பவராவார்.


6. முனிச் பாதுகாப்பு மாநாட்டுக்கு முன்னால் சோரஸ் பேசிய கருத்துகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம் அவர் அதானி குழும் சர்ச்சையில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கும் பொறுப்பு இருக்கிறது. இந்திய நாடாளுமன்றமும், சர்வதேச முதலீட்டாளர்களும் எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மோடியின் பிடியில் இந்தியா:


7. இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை நான் உருவாக்குவேன். மோடியின் பிடியில் உள்ள இந்திய அரசை விடுவிப்பேன். இது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் ஜனநாயக மறுமலர்ச்சியை நான் எதிர்பார்க்கிறேன்.
 
8. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் ஜார்ஜ் சோரஸ் குற்றம் சாட்டவில்லை என்றும், இந்திய ஜனநாயக அமைப்பையும் அவர் குறைகூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஜனநாயக முறையை அழிக்கும் நோக்கில் அவர் 100 பில்லியன் டாலர் நிதியை உருவாக்கி இருப்பதாகவும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 


9. அதானி சர்ச்சை எழுந்ததிலிருந்தே எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரே இதனால் முடங்கியது.


10. ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் தனது பங்கு மதிப்புகளை உயர்த்திக் காட்டி முதலீட்டாளர்கள் ஏமாற்றியதாக தெரிவித்தது. இதனால் உலகளவில் பெரும் சர்ச்சை எழுந்தது.