17 பீரங்கி குண்டுகள் முழங்க ஒரே தகன மேடையில் எரியூட்டப்பட்டன பிபின் ராவத், மதுலிகா ராவத் உடல்கள். அவர்களின் மகள்கள் க்ரித்திகா, தாரிணி இருவரும் இறுதிச் சடங்குகள் செய்து உடல்களுக்கு தீமூட்டினர்.


தமிழ்நாட்டின் குன்னூரில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பேரின் உடல்கள் நேற்று டெல்லிக்கு தனி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவர்களது உடல்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் உள்பட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.






இந்த நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் உடல்களுக்கு டெல்லி, கன்டோன்மெண்ட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. தந்தை பிபின் ராவத் மற்றும் தாய் மதுலிகா ராவத் உடல்களுக்கு அவர்களது மகள்களான கிரித்திகா ராவத் மற்றும் தாரிணி ராவத் இருவரும் இறுதிச்சடங்குகளை செய்தனர். தங்களது பெற்றோர்களின் உடல்களுக்கு அவர்கள் இருவரும் கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகள் செய்தது காண்பவர்களை கண்கலங்க வைத்தது. பின்னர், பிபின் ராவத் மற்றும் மல்லிகா ராவத்தின் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் அங்கிருந்த மயானத்தில் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவர்களது உடல்களை சுற்றி ராணுவ அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் இருந்தனர்.






முன்னதாக நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது, உயிரிழந்த13 பேரின் உடல்களும், அவர்கள் எந்த விமானத்தில் டெல்லியில் இருந்து கோவை வந்தனரோ, அதே விமானத்தில் கோவையில் இருந்து டெல்லி கொண்டு செல்லப்பட்டன


டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேற்று இரவு அவர்களது உடல்களுக்கு நாட்டின் பிரதமர் மோடி நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் அவர்களது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களது மகள்களும், உறவினர்களும் தேசிய கொடி போர்த்தப்பட்ட இவர்களது உடல்களை கண்டு கதறி அழுதனர். பின்னர், அங்கிருந்து ராணுவ வாகனத்தில் டெல்லியில் ராணுவ வீரர்களுக்கான மயானம் அமைந்துள்ள கண்டோன்மெண்ட் மயான தகனத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டது.


அங்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.