சாதி, மதம், இனம், நாடு, கண்டம், பாலினம் என அனைத்தையும் கடந்ததுதான் காதல். மற்ற உணர்வுகளை போலவே ஒரே பாலினத்தில் உள்ள இருவர் காதலிப்பதும் ஒரு இயல்பான ஒன்றே. ஆனால், தன்பாலின காதலை பழமைவாதிகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.


கலாசாரம், பாரம்பரியத்திற்கு எதிரானது என அவர்கள் விமர்சனம் முன்வைக்கின்றனர். ஆனால், பல நாடுகள் அதற்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன.


அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.


சமீபத்தில் கூட, தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றயது. இந்நிலையில், தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தன்பாலீர்ப்பு கொண்ட நான்கு ஆண் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 


தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வரும் நிலையில், சட்ட போராட்டத்தை தொடுத்துள்ளனர் தன்பாலீர்ப்பு தம்பதிகள்.


கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதுகுறித்து LGBT ஆர்வலர்கள் கூறுகையில், "2018 ஆம் ஆண்டின் தீர்ப்பு அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதிப்படுத்தியிருந்தாலும், தன்பாலின திருமணங்களுக்கான சட்டப்பூர்வ ஆதரவை அவர்களுக்கு இன்னும் மறுக்கப்படுகிறது. இந்த அடிப்படை உரிமையை எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் அனுபவித்து வருகின்றனர்" 


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆண் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவில், "திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல், மருத்துவ விவகாரங்களில் ஒப்புதல் வழங்கப்படுவது, ஓய்வூதியம், தத்தெடுப்பு அல்லது தம்பதிகளுக்கான கிளப் உறுப்பினர் போன்ற உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுதாரர்களில் ஒருவரான தொழிலதிபர் உதய் ராஜ் ஆனந்த் கூறுகையில், "லிவ் இன் உறவில் வாழ்க்கையை கட்டமைக்க முடியாது. பல விஷங்களை செய்ய முடியாது" என்கிறார்.


இணையேற்பு விழாவை நடத்திய தம்பதி சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங், "தம்பதிகளாக உடல்நலக் காப்பீட்டை எடுக்கவோ அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டங்களில் ஒருவருக்கொருவர் பரிந்துரைக்கவோ முடியாது என்பது தற்போது தெரிய வந்துள்ளது" என்கின்றனர்.