பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்‌ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கென சிறப்பு தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Continues below advertisement

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த முறை 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எப்படி?

Continues below advertisement

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்கள், mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜனவரி 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

 

PPC 2023ஆம் ஆண்டுக்கான தலைப்புகள்

* உங்களின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்* நம் கலாச்சாரமே நமது பெருமை* என் புத்தகம், என்னுடைய உத்வேகம்* வருங்காலத் தலைமுறைக்காக சூழலைக் காப்பாற்றுங்கள் * என் வாழ்க்கை, எனது நலம்* என்னுடைய ஸ்டார்ட் அப் கனவு* STEM கல்வி/ எல்லைகள் இல்லாத கல்வி* பள்ளிகளில் கற்க பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. 

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.

சிறப்பு தொலைபேசி எண்

1921 என்ற சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்து அனுப்பலாம். 

கடந்த ஆண்டைக் காண்டிலும் இரண்டு மடங்கு மாணவர்கள் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்துள்ளதாக, மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு 15.73 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 38.8 லட்சம் மாணவர்கள் இந்த முறை முன்பதிவு செய்துள்ளனர். 

2018ஆம் ஆண்டு முதல்முறையாக பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது 22,000 மாணவர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இந்த முறை தமிழகத்தில் இருந்து சுமார் 10 லட்சம் மாணவர்கள், பிரதமர் உடனான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.