கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது
இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்தவர் முகேஷ் அம்பானி. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் என்று பல முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இவருக்கு போட்டியாளராக கவுதம் அதானி வலம் வருகிறார். இந்த சூழலில், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும் முகேஷ் அம்பானியிடம் இருந்து கவுதம் அதானி பறித்துள்ளார்.
இந்நிலையில் கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகம் அதானி குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும், சொத்துக்கள் வாங்கவும் ஒரு மையப் புள்ளியாக செயல்படும் என தகவல் வெளியானது. வெளிநாட்டில் அலுவலகம் தொடங்குவதன் மூலம் அயல்நாட்டில் தொழில், முதலீடு ஆதிக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதானியின் வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அத்தகவலை அதானி நிறுவனம் மறுத்துள்ளது.
கவுதம் அதானி துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றில் தனது முதலீடுகளை செலுத்தியுள்ளார். கடந்தாண்டு அதானிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், தரவுகள் மையங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் அதானி நிறுவனம் தனது முதலீடுகளை செலுத்தி பன்மடங்கு லாபம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானியின் பங்கு மதிப்பு 600 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களான அம்பானியும், அதானியும் நிலக்கரியில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.
அதானி தனது குழுவை நேற்று உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்கு 2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 70 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு மிகப்பெரிய நிறுவனங்களான டோட்டல் எஸ்.இ., வார்பர்க் பிக்னஸ் எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ப்ரெஞ்ச் ஆயில் நிறுவனம் 20 சதவீத பங்குகளை அதானி பசுமை சக்தி நிறுவனத்தில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் மொத்தமாக அதிகரித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி 2.7 பில்லியன் குறைந்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற சாதனையை 235 பில்லியன் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தன் வசம் வைத்துள்ளார். இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை அமேசான் நிறுவன முன்னாள் எஸ்.இ.ஓ. ஜெப் பெசோஸ் 183 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுவிட்ட கவுதம் அதானி 3, 4 இடங்களில் மாறி மாறி இடங்களைப் பிடித்து வருகிறார்.