தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலைப்பளுவையும் எப்படி சமநிலையுடன் எதிர்கொள்வது என்பதற்கு உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானி அட்வைஸ் கொடுத்துள்ளார்.


ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், "ஒருவர் அவர்கள் விரும்பும் விஷயங்களைச் செய்யும்போது சமநிலை உணரப்படுகிறது. மரணம் என்ற உண்மையை ஒருவர் ஏற்றுக்கொள்ளும்போது வாழ்க்கை எளிமையாகிறது" என்றார்.



"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க"


தொடர்ந்து விரிவாக பேசிய அவர், "நீங்கள், உங்கள் வேலை - வாழ்க்கைக்கான சமநிலையை என் மீது திணிக்கக்கூடாது. நான், எனது வேலை-வாழ்க்கைக்கான சமநிலையை உங்கள் மீது திணிக்க மாட்டேன். சிலர், குடும்பத்துடன் நான்கு மணிநேரம் செலவழித்து அதில் மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.


ஒரு சிலர், எட்டு மணிநேரம் செலவழித்து அதை அனுபவிக்கிறார்கள். அதுதான் அவர்களின் சமநிலை. இருந்தபோதிலும், யாராக இருந்தாலும் மனைவியுடன் எட்டு மணி நேரம் செலவழித்தால், அவரது மனைவி அவரை விட்டு ஓடிவிடுவார்.


நீங்கள் செய்ய விரும்பும் விஷயங்களைச் செய்யும்போது உங்கள் வேலை-வாழ்க்கை சமநிலையில் இருக்கும். நமக்கு குடும்பமோ அல்லது வேலையோ, இதில் இருந்து வெளியே நமக்கு உலகம் இல்லை. நம் குழந்தைகளும் அதை கவனித்து அதை பின்பற்றுவார்கள். யாரும் இங்கு நிரந்தரமாக வரவில்லை. இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கை எளிமையாகிவிடும்" என்றார்.


அதானி கொடுத்த அட்வைஸ்:


இன்றைய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் அப்படி செய்தால் இந்தியாவின் உற்பத்தியின் மேம்படும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கடதாண்டு பாட்காஸ்ட் ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார். சமூக வலைதளத்தில் இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.


இதையடுத்து, நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஓலா சி.இ.ஓ. பவிஷ் அகர்வாலும் ஆதரவு தெரிவித்திருந்தார். வாரத்திற்கு 70 மணிநேர வேலை என்ற முறையை ஆதரிப்பதாக சமீபத்தில் பாட்காஸ்ட் ஒன்றில் அவர் தெரிவித்திருந்தார். இது உழைப்புச் சுரண்டல் என மனித உரிமை ஆர்வலர்கள் கூறிய நிலையில், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்