பாதுகாப்புத் துறையில் இறக்குமதியை மேற்கொள்ளும் நாடுகள் பலம்வாய்ந்தவையாகக் கருதப்படுவதில்லை. எனவே பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்தும் விதமாக, பாதுகாப்பு சிறப்பு மண்டலத்தை உருவாக்குவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை முயன்று வருகிறது.
`ஆத்ம நிர்பார் பாரத்’ என்ற திட்டத்தின் மூலமாக, மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுத்து வந்தாலும், பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா வளரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணர் கௌரவ் மெஹந்திரட்டா தனது ஆலோசனைகளை வெளியிட்டுள்ளார். மத்திய பட்ஜெட் வெளியாகவுள்ளதை அடுத்து மத்திய அரசு பாதுகாப்புத் துறைக்கு என்னென்ன செய்ய வேண்டும் என அவர் வழங்கியுள்ள ஆலோசனைகளை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.
வரும் மத்திய பட்ஜெட்டில் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை மேம்படுத்துவதில் இரண்டு முக்கிய வழிகள் இருக்கின்றன. இந்திய வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையை முழுவதுமாக நவீனமயப்படுத்துவதோடு, அதன் உற்பத்தியைப் பெரும் இடத்தில் அரசு மட்டுமே இருப்பதால் போதிய அளவில் உற்பத்திகளை மேற்கொள்ள முதலீடுகளை ஒதுக்க வேண்டும். அடுத்ததாக, பாதுகாப்புத்துறையின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்வதற்கான தனியார் நிறுவனங்கள் இயங்குவதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இந்திய வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சிக்காக சீர்திருத்தங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு 1,35,061 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது; இது சுமார் 19 சதவிகிதம் வருவாய் அளித்தது. தற்போதைய ஆண்டில் கூடுதலாக ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிப்பு, ஏற்றுமதி வளர்ச்சிக் கொள்கையின் வரைவுத் திட்டத்தின் படி, இந்த ஆண்டும் முதலீடு செய்யப்படும் மொத்த தொகையில் 15 சதவிகிதம் வருவாய் தரும் எனக் கூறப்பட்டுள்ளது.
உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகையை அளிக்கும் பல்வேறு திட்டங்கள் ஆட்டோமொபைல், மருந்து முதலான துறைகளின் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தத் திட்டம் ட்ரோன்கள் தயாரிப்புக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இது பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை மேற்கொள்ளும் உற்பத்தித் துறைக்கு வழங்கப்பட வேண்டும்.
பாதுகாப்புத் துறைக்கு அதிக செலவைத் தருவதாக தற்போது மாறியுள்ளது ஜி.எஸ்.டி வரிவிதிப்பு. பாதுகாப்புத் துறைக்கான உள்நாட்டுத் தயாரிப்பை ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இருந்து விலக்குவதை மத்திய அரசு கணக்கில் கொள்ள வேண்டும். மேலும், உள்நாட்டில் கிடைக்காமல், இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருள்களுக்கும் இதனைப் பொருத்துவது, வான்வெளி, பாதுகாப்புத் துறையை மேம்படுத்தப் பயன்படும்.
2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி மட்டுமல்லாமல், சுமார் 175 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் மத்திய அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்புத்துறையின் தன்னிறைவான செயல்பாட்டுக்காக மத்திய அரசு பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரும் எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.