பெங்களூரு அருகே ரூ.3 லட்சம் மதிப்புடைய 2.5 டன் தக்காளியை லாரியுடன் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை தங்கம் உச்சத்தை தொட்டு இல்லத்தரசிகளுக்கும், வியாபாரிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு சந்தையில் ஒருகிலோ தக்காளி ரூ.140 வரை விற்கப்படுவதால் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 1,100 டன் தக்காளியின் தேவை உள்ள நிலையில், வெறும் 400 தக்காளி மட்டுமே வருவதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என கூறப்படுவதால், அரசு தரப்பில் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் தக்காளி விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் மல்லேஷ் என்ற லாரியில் எடுத்து சென்ற 2.5 டன் தக்காளியை சிலர் வழிமறித்து திருடி சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிக்காஜாலா பகுதிக்கு அருகே விற்பனைக்காக 2500 கிலோ தக்காளியை லாரியில் மல்லேஷ் எடுத்து சென்றுள்ளார். அந்த வழியாக வந்த 3 பேர் தக்காளி சென்ற லாரியை வழிமறித்ததுடன், மல்லேஷ் மற்றும் ஓட்டுநரை கீழே தள்ளி விட்டு தக்காளி இருக்கும் லாரியை ஓட்டி சென்றுள்ளனர். இது குறித்து புகார் அளித்துள்ள மல்லேஷ், தனக்கு ரூ.3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கடந்த வாரம் ஹசன் மாவட்டத்தில் ரூ.2.7 கோடி மதிப்பிலான தக்காளி திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.