நாட்டின் தேசத்தந்தை எனப் போற்றப்படுபவர் மகாத்மா காந்தி. சுதந்திர போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்கை பறைசாற்றும் விதமாக நாடு முழுவதும் அவரை பாராட்டி சிலைகளும், மணி மண்டபங்களும் உண்டு. பஞ்சாப் மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் காந்திக்கு சிலை உண்டு.


பஞ்சாபில் உள்ளது அமைந்துள்ள பதிண்டா மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது ராமமண்டி பகுதி. இந்த பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் காந்தி நின்ற வடிவில் சிலை ஒன்று உள்ளது. அந்த பூங்காவை உள்ளூர் நகராட்சித்துறையினர் பராமரித்து வந்தனர்.




இந்த நிலையில், நேற்று காலையில் பூங்காவிற்கு வந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே இருந்த காந்தி சிலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு, சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருந்தது. மிகவும் மோசமாக தாக்கப்பட்டு சுக்குநூறாக காந்தி சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. காந்தியின் சிலையை மோசமாக தாக்கிய மர்மநபர்கள் அவரது தலையை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். பூங்கா முழுவதும் தேடியும் காந்தியின் சிலை மட்டும் கிடைக்கவில்லை.




சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி ஹர்ஜோத்சிங் மன் கூறும்போது, பூங்காவில் விளக்குகள் மோசமாக இருப்பதாகவும், பூங்காவை பாதுகாப்பதற்கு என்று தனிப்பட்ட பாதுகாவலர்கள் யாரும் இல்லையென்றும் கூறினார். அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளில் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் அசோக்குமார் சிங்லா பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.


இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கனடா நாட்டில் இருந்த காந்தி சிலையும் சுக்குநூறாக தாக்கப்பட்டிருந்தது. அந்த நாட்டில் உள்ள விஷ்ணு மந்திர் பகுதியில் இருந்த காந்தியின் சிலை தகாத வார்த்தைகளால் எழுதி அவரை கொச்சைப்படுத்தியிருந்தனர்.  கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலும் காந்தி சிலை கடுமையாக தாக்கப்பட்டு தகர்த்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காந்தி சிலை இருக்கும் இடங்களில் விரும்பத்தாத நிகழ்வுகள் நடைபெறுவற்கு காந்தியவாதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


கனடாவில் இருந்த காந்தியின் சிலைக்கு கீழே காலிஸ்தான் உள்ளிட்ட வார்த்தை மட்டுமின்றி தகாத வார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன. அங்கு சம்பவம் நடைபெற்ற ஓரிரு தினங்களில் பஞ்சாபிலும் காந்தி சிலை தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண