சுதந்திர போராட்ட வீரரும், மகாத்மா என அனைவராலும் அழைக்கப்பட்டவருமான காந்தியடிகளின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 


இப்போதைய தலைமுறையினருக்கு பள்ளி பாட புத்தகங்களிலும், ரூபாய் நோட்டில் சிரித்தவாறு இருக்கும் காந்தியை தான் தெரியும். மேலாடையின்றி, வேட்டியுடன் மூக்கு கண்ணாடி அணிந்தவாறு இருக்கும் காந்தி வேடம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.  ஆனால் ஒவ்வொருவரும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை நிச்சயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். 


மகான் காந்தி


மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது தான் காந்தியடிகளின் உண்மையான பெயர். இவர்  குஜராத் மாநிலத்தின் போர்பந்தரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயாரின் பெயர் புத்திலிபாய் என்பதாகும். குடும்பத்தின் கடைக்குட்டியாக பிறந்த காந்திக்கு  இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். அவர் தனது 13 வயதிலேயே சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட கஸ்தூரி பாயை மணந்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் பிறந்தனர். 


இப்படியான நிலையில் 16 வயதில் தந்தை உத்தம்சந்த் காந்தி மரணமடைய, 18வது வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக இங்கிலாந்துக்கு செல்கிறார். 3 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர் சிறிது காலம் மும்பையில்  வழக்கறிஞராக பணியாற்றினார். தொடர்ந்து  ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களிடம் படிவங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டார். இதற்கிடையில்  1893 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். முன்னதாக பகவத் கீதை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்த காந்திக்கு அந்த பயணம் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. 


ரயிலில் அவர் நிறவெறியால் அவமானப்படுத்தப்பட்டு  பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டார். மேலும் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்காட சென்றபோது தலைப்பாகையை கழட்டுமாறு உத்தரவிட்டதால் அங்கிருந்து வெளியேறினார். 


மக்களின் உரிமைக்காக போராடியவர்


இப்படி அந்நாட்டில் நிலவிய நிறவெறிக்கு எதிராக போராட முடிவு செய்த அவர், அங்கிருந்தகருப்பின மற்றும் இந்திய மக்களின் உரிமைகளை நிலை நாட்ட எண்ணினார். இதன் விளைவாக நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இவ்வாறாக  இந்தியர்களை ஒருங்கிணைத்து போராட ஊக்கமளித்தார். அவர் உட்பட மக்கள் பலரும் சிறை சென்றனர். தொடர்ந்து தாதாபாய் நவ்ரோஜிக்கு தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர்களின் நிலை குறித்து கடிதம் எழுதினார். 


1902 ஆம் ஆண்டு காந்தி இந்தியா திரும்பிய நிலையில், மும்பை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். ஆனால் காலத்தின் கட்டாயம் தென்னாப்பிரிக்காவை நோக்கி அழைத்தது.  1905 ஆம் ஆண்டு வங்க பிரிவினையை அப்போதைய பிரிட்டிஷ் அரசு முன்வைத்தபோது அதனை காந்தி கடுமையாக எதிர்த்தார். தென்னாப்பிரிக்காவில் சில காலம் மக்கள் போராட்டத்தை முன்னின்று நடத்திய அவர் 1915 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 


1917 ஆம் ஆண்டு முதல் சத்தியாகிரக போராட்டத்தை துவங்கிய காந்தி, பல சத்தியாகிரக போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினார். அமைதி வழியில் போராட்டங்கள் தான் அவரின் ஸ்பெஷல். மக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் தயங்காமல் குரல் கொடுத்தார். காந்தியின் செல்வாக்கு, இந்தியாவில் படிப்படியாக வளர ஆரம்பித்த நேரத்தில் 1920 ஆம் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்குகிறார்.


ஒரு பகுதியாக 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரை வரும் அவர், அங்குள்ள மக்கள் மேலாடை கூட அணிய வழியில்லாமல் வறுமையில் வாடுவதை எண்ணி வருத்தம் கொண்டார். தன் மேலாடையை களைந்த அவர், என்றைக்கு  இந்திய மக்கள் அனைவரும் முழு ஆடை அணிகிறார்களோ, அன்றுதான் நானும் அணிவேன் என சூளுரைத்து அதனை தன் இறுதி காலம் வரை உறுதியாக கடைபிடித்தார். 


1924 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1930ல் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம்  உப்புக்கு எதிரான வரியை கண்டித்து குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி வரை  கிட்டதட்ட400 கி.மீ, நடைபயணம் மேற்கொண்டார். 1931 ஆம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்துக் கொள்ள  லண்டன் சென்றார் காந்தி. இந்தியா திரும்பிய அவர் 1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 


அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுப்பதை கண்டித்து  எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் என காந்தி அறிவித்தார். அவரது வேண்டுகோளை ஒருவார உண்ணாவிரத போராட்டத்திற்கு பிறகு ஆங்கிலேய அரசு ஏற்றது.  மக்களுக்கு சுதந்திர தாகத்தை ஊட்டும் வகையில் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை இந்திய அளவில் நடைபெற செய்தார். 


இப்படியான சூழலில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை தடுக்க முயன்றார் காந்தி. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி காந்தி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டார்.காந்தியை தேசத்தந்தை என கூறியவர் சுபாஷ் சந்திர போஸ். அவரது கொள்கையை எதிர்த்தவர்கள் கூட காந்தியின் சுதந்திர வேட்கையை எதிர்க்கவில்லை. 


1969ஆம் ஆண்டில் தான் முதல் முதலாக காந்தியின் படம் ரூபாய் நோட்டில் இடம் பிடித்தது. நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை அப்போதைய அரசு எடுத்தது. 2007 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபை மகாத்மா காந்தியின் பிறந்தநாளை அகிம்சைக்கான சர்வதேச தினமாக அறிவித்தது. இப்படி பல சிறப்புகள் கொண்ட காந்தியை அவரது பிறந்தநாளில் கொண்டாடுவோம்..!