மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தியின் பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோல், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்பி ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “காந்தி ஜெயந்தியன்று மரியாதைக்குரிய அவருக்கு தலைவணங்குகிறேன். அவரது உன்னதமான கொள்கைகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை மற்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்திற்கான நமது பகிரப்பட்ட தேடலில், காந்திஜியின் அகிம்சை கொள்கை, நம்மையும், பிறநாடுகளையும் தொடர்ந்து வழிநடத்தும் என்று குடியரசுத் தலைவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 117ஆவது பிறந்த தினம் இன்று. இதையொட்டி, டெல்லி விஜய் காட்டில் அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவ ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
தமிழ்நாட்டில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், மதுரையில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.