தொழில்நுட்பம், பொருளாதாரம், உத்திசார் வலிமை போன்றவை ஆதிக்கம் செலுத்தும் இன்றைய போட்டி நிறைந்த உலகில், இந்தியாவின் கலாச்சார சக்தி தனித்துவமாக விளங்கிகிறது என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார்.
"பாரம்பரியத்தை சீர்குலைக்க முயற்சி"
இந்த கலாச்சார சக்தி இந்தியாவின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் கலாச்சார பாரம்பரியத்தை கண்ணியத்துடன் பாதுகாக்க உதவுகிறது என்றும் தேசத்திற்கு ஒரு புதுப்பிக்கப்பட்ட அடையாளத்தை வழங்குகிறது என்றும் அவர் எடுத்துரைத்தார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் 14-வது நிறுவன நாள் விழாவில் இன்று அவர் உரையாற்றினார். பாரம்பரிய பாதுகாப்பில் அறிவியல் அணுகுமுறையை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.
2014 வரையிலான 200 ஆண்டுகள், இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை சீர்குலைக்கும் திட்டமிட்ட முயற்சிகள் அரங்கேற்றப்பட்டன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில், இந்தியர்களின் கலை, கலாச்சாரம், கட்டிடக்கலை, அறிவியல், அறிவு ஆகியவை மேற்கத்திய மரபுகளைவிட தாழ்ந்தவை என்று நம்ப வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய அமைச்சர் பேசியது என்ன?
கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசத்தின் வளர்ச்சி, நமது பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகிய இரண்டிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். இது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் கௌரவத்தை மேம்படுத்துவதுடன், பாரம்பரிய பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார். விழாவின் தொடக்க அமர்வில் மத்திய அமைச்சருடன் தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் கிஷோர் கே பாசா, பிற என்எம்ஏ உறுப்பினர்கள், கலாச்சார அமைச்சக அதிகாரிகள், இந்திய தொல்பொருள் ஆய்வகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, என்எம்ஏ-வின் ஆண்டு அறிக்கை 2023-24-யும் மத்திய அமைச்சர் வெளியிட்டார். இது அந்த ஆண்டிற்கான ஆணையத்தின் நடவடிக்கைகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
இதையும் படிக்க: Internal Marks: பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்கள் கணக்கீடு எப்படி? முக்கிய விதிகள் இதோ!