G20 Summit Delhi: ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்துள்ளார். அவருக்கு இந்தியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. 


ஜி20 மாநாடு:


உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள் இடம்பெற்றுள்ள, ஜி20 அமைப்பிற்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன்படி, அந்த அமைப்பின் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 20 உறுப்பு நாடுகள் மற்றும் 20 அழைப்பு நாடுகள் என மொத்தம் 40 முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  இதனால் ஒட்டுமொத்த டெல்லியே விழாக்கோலம் பூண்டுள்ளது. அதேநேரம், டெல்லியில் மாநகரம் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டெல்லி மாவட்டம் முழுவதும் காவல்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள நிலையில், நாளை முதல் பொதுமக்களுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ், நைஜீரியாவின் அதிபர் போலா டினுபு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.


இந்தியா வந்தார் ஜோ பைடன்:


இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க  அதிபர் ஜோ பைடன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் ஜோ பைடனை வரவேற்றனர்.  இதனை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க செல்கிறார் ஜோபைடன்.  லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்தித்துப் பேசுகின்றனர். அதன் பிறகு பிரதமர் மோடியுடன் இரவு உணவு சாப்பிடுவார்.






அங்கு, ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. எரிசக்தி, வர்த்தகம், உயர் தொழில்நுட்பம், பாதுகாப்பு போன்ற துறைகளில் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இதனுடன், உலகின் சில கடுமையான சவால்களைச் சமாளிப்பதில் இரு நாடுகளும் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை பற்றியும் இரு தலைவர்களும் விவாதிக்கலாம் என்று கூறப்படுகிறது.