தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடாக அரசு திறந்துவிட்டுள்ளது. அதன்படி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு நொடிக்கு 4,398 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மைசூரில் உள்ள கபினி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. 


காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு:


தமிழ்நாட்டுக்கு 5,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த நிலையில், கர்நாடகாவில் வறட்சி நிலவி வருவதாக கூறி, கர்நாடக அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து, ஒழுங்காற்று ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.


தண்ணீரை திறந்து விட்டால் போராட்டம் நடத்துவோம் என பல்வேறு விவசாய அமைப்புகள் எச்சரித்து வந்த நிலையில், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.


"தமிழ்நாடு அதிகப்படியான தண்ணீரையும் பயன்படுத்துகிறது"


தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை தொடர்ந்து எதிர்த்து வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, காவிரியில் தண்ணீர் கிடைப்பது அரிது என்றும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இன்று செய்தியாளர்களை சந்தித்த பசவராஜ் பொம்மை இதுகுறித்து கூறுகையில், "காவிரியில் தண்ணீர் கிடைப்பது அரிது. தண்ணீரை தடுத்து நிறுத்துவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  கர்நாடகாவின் பரிதாப நிலையையும், தமிழ்நாடு அதிகப்படியான தண்ணீரையும் பயன்படுத்தி வருவதையும் உச்சநீதிமன்றத்திடம் எடுத்துக்கூற வேண்டும்" என்றார்.


சமீபத்தில், காவிரி பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே. சிவக்குமார், "இதற்கு ஒரே தீர்வு மேகதாது திட்டம்தான். கர்நாடகாவில் உள்ள இடங்களைப் பார்வையிட்டு, எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பார்க்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறோம்.


டி.கே. சிவக்குமார் சொன்னது என்ன?


இன்று அனைத்து சட்ட வல்லுனர்களையும் சந்தித்து பேசினோம். தற்போது, ​​கர்நாடகா சார்பில் ஆஜரான எங்கள் மூத்த வழக்கறிஞரை சந்திக்க ஒட்டுமொத்த குழுவும் சென்று கொண்டிருக்கிறது. 5,000 கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் கர்நாடகாவுக்கு பெரும் வேதனை.


மழை இல்லை. கர்நாடகாவின் உணர்வுகளுக்கும் விவசாயிகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடு விவசாயிகளையும் மதிக்கிறோம். ஆனாலும், கர்நாடகா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேகதாதுதான் தீர்வு என்பதே எங்களின் வேண்டுகோள். மேகதாது கர்நாடகாவுக்கு இல்லை. அது தமிநாட்டுக்கும் உதவும்" என்றார்.