மத்தியப்பிரதேசத்தில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஒரு ஜெர்மன் ஷெர்பர்ட் நாய் சிறிது தூரம் நடந்தது கவனம் பெற்றது. மேலும் அவர் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஓட்டியும் கவனம் ஈர்த்தார்.


காங்கிரஸ் கட்சியை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ’பாரத் ஜோடா யாத்திரை’ அதாவது ‘ஒற்றுமைப் பயணம்’ எனும் பேரில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிரார். கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மத்தியப் பிரதேசத்தில் யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.






மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த  செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.


12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், இன்று இந்தூரில் அவர் யாத்திரை மேற்கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் இது 5வது நாள் யாத்திரை. முன்னதாக நேற்றிரவு அம்பேத்கரின் பிறந்த ஊரான மோவ் நகரில் ராகுல் தங்கியிருந்தார். இன்று காலை அங்கிருந்து இந்தூர் நோக்கி புறப்பட்டார். அப்போது அவர் சிறிது தூரம் புல்லட்டில் பயணித்தார். இந்தூர் வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்தூரில் ராகுல் யாத்திரையை குலைக்க குண்டு வெடிப்பு நடத்தப்படும் என்று அநாமதேய கடிதம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால், இந்தூர் ஆணையர் 1400 காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தார். ராஜ்வாடா பகுதியில் சிதிலிமடைந்த 12 வீடுகளில் இருந்தோர் பாதுகாப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக அப்புறப்படுத்தப்பட்டனர். நவ.17 ஆம் தேதி இந்தூரில் ஒரு இனிப்பகத்துக்கு வந்த அநாமதேய கடிதத்தில் சீக்கியர்கள் கலவரத்துக்கு கூலியாக ராகுலை கொல்ல குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் யாத்திரை நடந்தது.






இந்த யாத்திரையில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை ராகுல் காந்தி அழைத்துச் சென்றார். சிறிது தூரம் அந்த நாய் நேர்த்தியாக ராகுலுடன் பயணித்தது. இந்த புகைப்படத்தை பகிர்ந்த காங்கிரஸ், பாசம் ஃப்ரெண்ட் என்று அதற்கு தலைப்பிட்டிருந்தது.