Kedarnath Ropeway: உத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான் இரண்டு ரோப்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கேதார்நாத் ரோப்வே திட்டம்:
உத்தராகண்டில் மலைப்பாங்கான பகுதிகளில் இணைப்பை அதிகரிப்பதையும், சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, "பர்வத்மாலா பரியோஜனா"வின் கீழ், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் இரண்டு ரோப்வே திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், கேதார்நாத் ரோப்வே மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
அதன்படி, சாமோலி மாவட்டத்தில் உள்ள கோவிந்த்காட் முதல் ஹேம்குந்த் சாஹிப் வரையில் 12.4 கி.மீ நீளத்திற்கு, ரோப்வே திட்டத்தை செயல்படுத்த மொத்த மூலதனச் செலவு ரூ.2,730.13 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சோன்பிரயாக் முதல் கேதார்நாத் வரையிலான 12.9 கி.மீ நீளத்திற்கான, ரோப்வே திட்டத்தின் மொத்த மூலதனச் செலவு ரூ.4,081 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
9 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறையும் பயணம்:
12.9 கி.மீ நீளமுள்ள கேதார்நாத் ரோப்வே திட்டம், சோன்பிரயாகை கேதார்நாத்துடன் இணைக்கும், இதன் முதலீட்டு மதிப்பு ரூ.4,081 கோடி ஆகும். உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாகையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 12 புனித ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான கேதார்நாத்தை இந்த ரோப்வே திட்டம் இணைக்கும்.
முன்னதாக, சோன்பிரயாக் மற்றும் கேதார்நாத் இடையேயான 21 கிலோமீட்டர் தூரத்தை யாத்ரீகர்கள் மலையேற்றம் மூலம் பயணித்தனர். சோன்பிரயாக்-கௌரிகுண்டை இணைக்க 5 கி.மீ சாலை பயணமும், மீதமுள்ள 16 கி.மீ பயணம் கால்நடையாகவும் மேற்கொள்ளப்பட்டது. புதிய திட்டத்தின் மூலம், 8-9 மணி நேரம் எடுக்கும் பயணம் 36 நிமிடங்களாகக் குறைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த, வசதியான மற்றும் வேகமான இந்த ரோப்வே இணைப்பு, யாத்திரை பருவத்தின் 6 மாதங்கள் முழுவதும் யாத்ரீகர்களுக்கு பயணத்தை எளிதாக்கும்.
நாளொன்றிற்கு 18,000 பேர் பயணிக்கலாம்:
மேம்பட்ட ட்ரை-கேபிள் டிடாச்சபிள் கோண்டோலா (3S) தொழில்நுட்பம் ஒவ்வொரு திசையிலும் ஒரு மணி நேரத்திற்கு 1,800 பயணிகளை ஏற்றிச் செல்லும். தினசரி 18,000 பயணிகள் இதன் மூலம் கேதார்நாத் அடையலாம்.
பொது-தனியார் கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், கட்டுமானம் மற்றும் செயல்பாட்டு கட்டங்கள் இரண்டிலும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும். ஹோட்டல், உணவு சேவைகள் மற்றும் சுற்றுலா போன்ற துறைகளையும் மேம்படுத்தும், ஆண்டு முழுவதும் பார்வையாளர்களை ஊக்குவிக்கும். உத்தரகண்டில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில், ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 20 லட்சம் யாத்ரீகர்களை ஈர்க்கிறது என்பது குறிப்பிடத்தகக்து.
தரிசன நேரத்தை அதிகரிக்க ஹேம்குண்ட் சாஹிப் ரோப்வே:
சமோலி மாவட்டத்தில் 15,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஹேம்குண்ட் சாஹிப், குரு கோவிந்த் சிங் தியானம் செய்த இடமாக நம்பப்படுகிறது. இது ராமரின் சகோதரர் லட்சுமணனின் தியான தளமாகவும் பிரபலமானதாக உள்ளது. இந்நிலையில் தான் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கி.மீ நீளமுள்ள ரோப்வே திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.
முன்னதாக, கோவிந்த்காட்டிலிருந்து ஹேம்குண்ட் சாஹிப்புக்கு இடையிலான பயணம் 20 கிலோமீட்டர் நீளமாக இருந்தது. கங்காரியா வழியாக மலையேற்றமும் செய்ய வேண்டி உள்ளது. புதிய ரோப்வே பயணத்தின் மூலம், கோவிந்த்காட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் வரையிலான பயண நேரம் 42 நிமிடங்களாகக் குறைக்கப்படும். பயண நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 4-5 மணி நேரமாக இருந்த தரிசன நேரத்தையும் 10 மணி நேரமாக அதிகரிக்க உதவும்.