தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சென்ற இளைஞர் ஒருவருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


கோலியின் நட்சத்திர உணவகம்:


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி. இவர் நடப்பு உலகக் கோப்பையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினார். சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்தார். மேலும், உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார்.


இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள இவர் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். விளையாட்டு மட்டுமின்றி பல்வேறு தொழில்களிலும் விராட் கோலி ஈடுபட்டு வருகிறார். அதன்படி, மும்பையில் ஒன் 8 என்ற உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.


வேஷ்டி சட்டைக்கு அனுமதி மறுப்பு:


இந்நிலையில், தான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் சென்ற இளைஞர் ஒருவருக்கு விராட் கோலியின் உணவகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அந்த இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நிற்பது விராட் கோலி சாரின் ஒன் 8 உணவகம். இவ்வளவு தூரம் வந்தும் இப்படி ஒன்று நடந்தது ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு.  நான் மும்பைக்கு வந்த உடனே அருகில் உள்ள உணவகம் ஒன்றில் தான் தங்கியிருந்தேன்.


ஆனால் அங்கு கூட சாப்பிடாமல் விராட் கோலியின் உணவகத்தில் சாப்பிடுவதற்காகத்தான் வந்தேன். புத்தம் புதிய ராம்ராஜ் வேஷ்டி கட்டித்தான் இங்கு வந்துருக்கேன்.  அப்படி இருந்தும் அங்குள்ளவர்கள். சாரி சார் ட்ரெஸ் கோடு சரியில்லை என்று கூறி அனுமதி மறுத்துவிட்டனர்.






வருத்தத்துடன் நான் திரும்பிச் செல்கிறேன். இது தொடர்பாக அவர்கள் ஆக்‌ஷன் எடுப்பார்களா? என்பது எனக்கு தெரியவில்லை.  ஆனால், இது போன்று இனிமேல் நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும். லுங்கியோ, ட்ரவுசரோ அணிந்து உள்ளே சென்று அனுமதி மறுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் ஒரு தமிழ் அடையாளத்துடன் பசியுடன் வந்திருக்கும் எனக்கு அனுமதி மறுத்தது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


குவியும் கண்டனம்:


அதேநேரம், வேஷ்டி அணிந்து உணகத்திற்குள் செல்ல முயன்ற இளைஞருக்கு அனுமதி மறுத்தற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், விராட் கோலியின் ஒன் 8 உணவகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.