தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் தொற்று, உலகளவில் லட்சக்கணக்கான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளில், பரவல் வேகம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.


அதேபோல இந்தியா முழுவதும் ஒமிக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேலும் பல்வேறு கட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,067 ஆக பதிவாகியுள்ளது. இது இரண்டு நாட்களில் 50% சதவீதம் அதிகரித்துள்ளது. 


இந்த சூழலில், ஒமிக்ரான் தொற்றுக்கான உடனடி மருந்துகள், மூலிகை மருத்துவம் ஆகியவை வழங்கப்பட்டு வருவதாகவும், இலவச ஒமிக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் சைபர் கிரைம் நபர்கள் மக்களிடம் மோசடி செய்வதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக அழைப்புகள், குறுஞ்செய்தி, இ-மெயில்கள் மூலம் மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதாகவும் புகார் எழுந்தது. 






இந்த சூழலில் சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சக இணையம் மற்றும் தகவல் பாதுகாப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.


கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று ஆரம்பித்த காலகட்டத்திலேயே இதுபோன்ற சைபர் குற்றங்கள் நடந்தன. பண மோசடியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூழலில், இலவச ஒமிக்ரான் தொற்றுப் பரிசோதனை என்ற பெயரில் சைபர் குற்றங்கள் நடைபெற என்ன காரணம்? மோசடியைத் தடுப்பது எப்படி என்பது குறித்து சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயனிடம் பேசினோம்.


ட்ரெண்டிங் செய்திகளில் தொடங்கும் மோசடி


''ஏமாற்றுக்காரர்களுக்கு ட்ரெண்டிங் செய்திகள் கிடைத்தால் போதும். அவற்றை வைத்து சமூக வலைதளங்களில் புதிய பக்கங்களை (pages) உருவாக்குவார்கள். தனி வலைதளத்தையே உருவாக்குவார்கள். அவற்றைத் தொடர்ந்து விளம்பரப்படுத்துவார்கள். இதன் மூலம் அவற்றைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாகும். அதன்பிறகு அந்த ஃபேஸ்புக்/ ட்விட்டர்/ யூடியூப் பக்கத்தின் பெயரை மாற்றிவிடுவார்கள். 


அவர்கள் பொழுதுபோக்குக்காக இவை எதையும் செய்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றி, பணம் சுருட்டும் திட்டத்தின் முதல்படிதான் இது. 





மக்கள் முதலில் செய்திகளின் மூலத்தை சரிபார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், எந்தத் தகவலையுமே கண்ணை மூடிக்கொண்டு ஃபார்வர்ட் செய்யக்கூடாது. அதிகாரபூர்வ செய்தி ஊடகங்களில் இருந்து வெளியாகும் தகவல்களை நம்பலாம். அதேநேரத்தில், அதிகாரபூர்வ ஊடகங்களின் வண்ணங்கள், வார்த்தைகளைப் போலவே வடிவமைத்து வரும் போலித் தகவல்களை உன்னிப்பாகக் கவனித்து, புறந்தள்ள வேண்டும். 


குற்றவாளிகள் அதிபுத்திசாலிகள் அல்ல


அதேபோல அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இந்த உதவி எண்களை அழையுங்கள் என்று வரும் இணைப்புகளை (link), யோசிக்காமல் க்ளிக் செய்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் அரசின் நேரடி இணைய முகவரிக்குச் சென்று சரிபார்க்க வேண்டும். சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிபுத்திசாலிகள் என்றெல்லாம் கூறிவிடமுடியாது. மக்களின் சோம்பேறித்தனம் மற்றும் முட்டாள்தனத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 


சைபர் மோசடிக்காரர்கள் செல்போனுக்கு அனுப்பும் இணைப்பை நாம் சரிபார்க்காமல் திறந்தால், குறிப்பிட்ட செயலி தானாகவே நம்முடைய செல்போனில் தன்னைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும். நம்முடைய தகவல்களைத் தொடர்ந்து திருட ஆரம்பிக்கும். நம்முடைய தொடர்பு எண்கள், புகைப்படங்கள், காணொலிகள், மைக் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும். வங்கிக் கணக்கு, கடவுச்சொல் உள்ளிட்டவற்றையும் களவாடும். ஆனால், அந்த செயலி நம் செல்போனில் இருப்பது நமக்கே தெரியாது. ஐஓஎஸ் செயலியில் இது நடக்க வாய்ப்பு குறைவு. ஆனால் ஆன்ட்ராய்டு செயலியில் சர்வசாதாரணமாக நடைபெறும்.


எல்லாச் செயலிகளுமே நம்முடைய தகவல்களைத் திரட்டுகின்றன என்றாலும் பெருநிறுவனங்கள் ஓரளவு நம்முடைய தனியுரிமையைக் காக்க முயற்சிக்கின்றன. ஆனால் அடையாளம் இல்லாத போலிச் செயலிகள், தகவல்களைத் திருடி விற்பது, பணத்தைப் பரிமாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள அதிக வாய்ப்புண்டு'' என்று எச்சரிக்கிறார் சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்.


 



சைபர் குற்றவியல் நிபுணர் கார்த்திகேயன்.


விருந்தாளியாக மட்டுமே நடத்துங்கள் 


எந்த ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போதும், இது இலவசம்தானே இருந்துவிட்டுப் போகிறது என்று நினைக்காமல், நமக்கு உண்மையிலேயே அவசியமா? என்று யோசித்துத் தரவிறக்கம் செய்ய வேண்டும். ஏனெனில் ஒருமுறை ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்தால், அதை நீக்கினாலும் நம்முடைய செல்போனில் அந்தச் செயலி இருக்கும். 


எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், மொபைலுக்குள் ஒரு டிஜிட்டல் ஆவணம் வந்தால், அதை அழிக்கலாம். ஆனால் கண்ணில் இருந்து மட்டுமே அழியும். அதை நிரந்தரமாக அகற்றிவிட முடியாது. ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இந்தத் தத்துவத்தில்தான் செயல்படுகின்றன. அதனால், செல்போன்கள் நம்முடைய ஆன்மாவாகவே இருந்தாலும், அதை ஒரு விருந்தாளியாக மட்டுமே நடத்துங்கள் என்கிறார் கார்த்திகேயன். 




கேமரா பயன்பாடு குறித்தும் பேசியவர், ''மொபைல் கேமரா மீது ஒரு ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம். தேவைப்படும்போது மட்டும் நீக்கிப் பயன்படுத்தலாம். இதனால் 24 மணி நேரமும் இயங்கும் கேமரா, நம்முடைய தகவல்களைத் திரட்டுவது தடுக்கப்படும். அதேபோல நீங்கள் அருகில் யாரிடமாவது பேசிக்கொண்டிருக்கும் தகவலையும் மைக் சேகரிக்கும். 


அதனால், மொபைலை சில கட்டுப்பாடுகளுடன் ஒரு விருந்தாளியாக மட்டுமே நடத்த வேண்டும். குடும்ப உறுப்பினராகக் கருதக் கூடாது. இவற்றின் மூலம் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்'' என்று முடித்தார் கார்த்திகேயன். 


தொழில்நுட்பம் வளர வளர அதில் உள்ள மோசடிகளும் வளர்வதை நாம் மறந்துவிடக்கூடாது. செல்போன் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக, 3வது கையாகவே மாறிவிட்டது. இந்த சூழலில் மின்னணு சாதனங்களை கவனத்துடன் கையாள வேண்டியதன் தேவையை சைபர் குற்றங்கள் உணர்த்துகின்றன.