பெங்களூருவில் புடவைக்காக இரு பெண்கள் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.


சலுகை விலைக்கு புடவை விற்பனை:


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள மைசூர் சில்க்ஸ் கடையில், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் சலுகை விலையில் புடவைகள் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடைபெற்ற சலுகை விற்பனையை அறிந்து ஏராளமான பெண்கள் அந்த கடையில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியுள்ளது.






இரு பெண்களிடையே மோதல்:


அந்த வகையில் குவிந்தவர்களில் ஒரு குறிப்பிட்ட புடவையை எடுப்பதில் இரு பெண்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு எல்லாம் வாய் வார்த்தைகள் முற்றியதில், ஒருவரை ஒருவர் முடியை பிடித்துக்கொண்டு மாறி மாறி கன்னங்களில் அறைந்துள்ளனர். அங்கு இருந்த பெண்கள் மற்றும் காவலர்கள் தடுக்க முயன்றபோதும் அதை சற்றும் பொருட்படுத்தாமல் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அங்கு இருந்த ஒரு மேசையின் மீது ஒருவரை ஒருவர் இழுத்தி தள்ளிக்கொண்டதால் அந்த இடமே சற்று நேரத்தில் பரபரப்பாக மாறியுள்ளது. இதை கண்ட சில பெண்கள் அலறி அடித்து தூரமாக ஓடியுள்ளனர். அதேநேரம், அங்கு இருந்த வேறு சில பெண்கள் சுற்றி என்ன நடந்தால் நமக்கென்ன எனும் வகையில், சண்டையை குறித்து சிறிதும் கவலைப்படமால் புடவை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர். 


இணையத்தில் வைரல்:


அந்த கடைக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கு நடந்த சண்டை தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடவே, தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. ஏராளமானோர் அதை பகிர்ந்து வருவதோடு, பல்வேறு விதமான கமெண்டுகளையும் பதிவு செய்து வருகின்றனர்.


சுவாரஸ்யமான கமெண்ட்கள்:


என்னதான் நடந்தாலும் ஷாப்பிங் தான் முக்கியம் என புடவையை எடுக்கும் பெண்கள் தான் பெஸ்ட் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். புடவை என்பது வெறும் ஆடை அல்ல அது நமது உணர்வு என வேறு ஒருவர் தெரிவித்துள்ளார். புடவைக்கு எந்த அளவிற்கு நமது ஊரில் போட்டா போட்டி நடைபெறுகிறது என்பதை காட்டும் இந்த வீடியோவை விளம்பரமாக பயன்படுத்தலாம் என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இறுதியாக ஒருவர் ”நம்ம ஊர்ல தான்யா புடவை, நிலம் மற்றும் காசுக்காக எல்லாம் அடிச்சுக்கிறோம்” என கருத்து தெரிவித்துள்ளார்.