தெலங்கானாவில் கே.சந்திரசேகர்ராவ் தலைமையிலான பாரத ராஷ்ட்ர சமிதி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் தெலங்கானாவிற்கு சென்ற பிரதமர் மோடியை வரவேற்பதற்கும், அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளிலும் சந்திரசேகர்ராவ் பங்கேற்காதது பெரும் விவாதமாக மாறியது. தெலங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், தற்போது முதலே அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.


இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு:


இந்த நிலையில், ஹைதரபாத் அருகே உள்ள செவல்லாவில் நடைபெற்ற விஜயசங்கல்ப சபா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது, அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் அரசியலமைப்புக்கு புறம்பாக உள்ள இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம். அந்த இட ஒதுக்கீட்டை பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்குவோம்.




ஓவைசியின் கைகளில் ஸ்டீயரிங் இருக்கும்போது கார்( சந்திரசேகர்ராவ் கட்சியின் சின்னம்) எப்படி சரியான திசையில் செல்லும்? 2024ம் ஆண்டு பிரதமர் ஆகிவிடலாம் என்று சந்திரசேகர் கனவு காண்கிறார். ஆனால், நரேந்திர மோடியே மீண்டும் அந்த இடத்தை பிடிப்பார். நீங்கள் உங்கள் இடத்தை மீண்டும் தக்க வைப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களை பதவியில் இருந்து இறக்கும் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். பொதுமக்களிடம் இருந்து பிரதமர் மோடியை தள்ளி வைக்க சந்திரசேகர்ராவால் முடியாது.”


இவ்வாறு அவர் பேசினார்.


கர்நாடகாவில் ரத்து:


கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அந்த இட ஒதுக்கீட்டை அந்த மாநிலத்தில் உள்ள வொக்கலிக்கா, லிங்காயத்து உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு வழங்கியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் பெரும் கலவரமே அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக சட்டசபை தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த சூழலில், தெலங்கானா சட்டமன்ற தேர்தல் நடப்பாண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் அங்கும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அமித்ஷா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு 88 தொகுதிகளை கைப்பற்றி சந்திரசேகர் ராவ் தொடர்ந்து 2வது முறையாக முதலமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். 19 தொகுதிகளுடன் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 7 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


மேலும் படிக்க: மும்பையில் லிவ் இன் பார்ட்னரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்த இளம் பெண்


மேலும் படிக்க: Wrestlers Protest: பாலியல் தொல்லை.. 3 மாதங்களாக FIR பதிவு செய்யாத போலீசார்.. போராட்டத்தில் குதித்த வீராங்கனைகள்..!