உத்தரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சிக்கு மேலும் ஒரு பேரிடியாக அந்தக் கட்சியின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மௌரியாவும் அடக்கம். இந்த நான்கு உறுப்பினர்களும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


மௌரியாவுடன் ஷாஜன்பூர் தொகுதி உறுப்பினர் ரோஷன் லால் வர்மா, பந்தா தொகுதி உறுப்பினர் பிரிஜேஷ் ப்ரஜாபதி, கான்பூர் உறுப்பினர் பகவதி சாகர் ஆகியோரும் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர். உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது இது முதல்முறை அல்ல, அந்தக் கட்சியின் பக்ராய்ச் உறுப்பினர் மதுரி வெர்மா, பதாயுன் தொகுதி உறுப்பினர் ராதா கிருஷ்ண சர்மா, சந்த் கபிர் நகர் உறுப்பினர் திக்விஜய் நாராயண் சௌபே ஆகியோரும் பாரதிய ஜனதாவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மீது ஜீப் ஏற்றிக் கொல்லப்பட்ட விவகாரம் தொட்டே உத்திரப்பிரதேசத்தில் ஆளும் அதித்யநாத் அரசின் மீது பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. பல்வேறு அரசியல் பிரமுகர்களும் அதித்யநாத் அங்கே மீண்டும் ஆட்சிக்கு வருவது மிகக் கடினம் எனக் கணித்துள்ளனர். இதற்கிடையேதான் தேர்தல் நெருங்கும் சூழலில் அங்கே தற்போது கட்சித்தாவல் படலம் அரங்கேறி வருகிறது. 


ஸ்வாமி பிரசாத் மௌரியா வெளியேறியது குறித்து கருத்துக் கூறியுள்ள அந்தக் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ், மௌரியாவை ’கச்ரா’ அதாவது குப்பை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’ஜின்னாவாத’ சிந்தனையில் இருப்போர் தேர்தலில் தங்களுக்கு எதிராக ஒன்றுகூடுவதாகவும் அது பாஜகவை எந்த வகையிலும் பாதிக்காது எனவும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும் எனவும் கூறியுள்ளனர்.


இத்தனைக்கும் ஸ்வாமி பிரசாத் மௌரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியா சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் முயற்சி தோல்வியுற்றது. இன்று ஆளுநர் ஆனந்திபென் பாட்டிலிடம் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஸ்வாமி பிரசாத், பாரதிய ஜனதா அரசு தலித் எழுச்சிக்காவும் பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் நலனுக்காகவும் எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார். 






2017-இல்தான் மௌரியா பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்தார். இவரது இந்த ராஜினாமா பாரதிய ஜனதாவின் குஷிநகர் தொகுதி, பிரதாப்கர், கான்பூர் தேகத், பந்தா மற்றும் ஷாஜன்பூர் தொகுதி வாக்கு வங்கிகளை பாதிக்கும்.


இப்படித் தொடர் ராஜினாமாக்கள் உத்திரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கை சரியவைக்குமா? சரியுமானால் அது மற்ற மாநிலங்களில் அந்தக் கட்சியின் செல்வாக்கை பாதிக்குமா? தேர்தல் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.