Naturals Ice Cream: இந்தியாவில் மிகவும் பிரபலமான நேட்சுரல் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனரான, ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் தனது 70வது வயதில் உயிரிழந்தார்.


ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் காலமானார்:


இந்தியாவின் தலைசிறந்த ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான,நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனரான ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத் தனது 70வது வயதில் காலமானார். இந்தியாவின் ஐஸ்கிரீம் மனிதர் என வர்ணிக்கப்படும் இவர், கடந்த 17ம் தேதி அன்று மாலை மும்பையின் HN ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்டகாலமாக உடல்நலக்குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அவர் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


ரூ.400 கோடி மதிப்பிலான நிறுவனம்: 


ரகுநந்தன் காமத் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான பின்புலத்தை கொண்டுள்ளார் . சாதாரண பின்னணியில் இருந்து வந்த அவர், 400 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான தேசத்தின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்க பல போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார்.


யார் இந்த ரகுநந்தன் ஸ்ரீனிவாஸ் காமத்?


கர்நாடகாவின் தெற்கு கன்னடா பகுதியில் உள்ள மங்களூர் தாலுக்காவில் உள்ள முல்கி என்ற நகரத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் தான் ரகுநந்தன். இன்று சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீஸ் நிறுவனத்தை நிறுவி, ஐஸ்கிரீம் துறையில் நன்கு அறியப்பட்ட நபராக உருவெடுத்துள்ளார். அவர் ஆறு சகோதரர்களை கொண்டு ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.  பழ வியாபாரியான அவரது தந்தை மட்டுமே வீட்டிற்கான வருமானத்தை ஈட்டிய ஒரே நபராவார். சிறுவயதில் தனது தந்தைக்கு பழ வியாபாரத்தில் உதவிய காமத், அந்த அனுபவத்தின் மூலம் பழங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்துகொண்டார். 14 வயதில் தனது மங்களூர் கிராமத்தை விட்டு மும்பைக்கு பயணமான அவர்,  தனது சகோதரரின் தென்னிந்திய உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவர் தனக்கான ஒரு தொழில்முறை பயணத்தை தொடங்கினார்.


நேட்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் தொடக்கப்புள்ளி: 


அதன்படி, 1984ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி நான்கு பணியாளர்கள் மற்றும் சில அடிப்படை பொருட்களுடன் ஐஸ்கிரீம் வணிகத்தைத் தொடங்கினார். அதன் மூலம் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனம் பிறந்தது. முதலில் நிறுவனம் தொடங்கும் போது 12 வகைகள் மட்டுமே கிடைத்தன, இவை அனைத்தும் ரகுநந்தனின் தந்தையின் பழத் தொழில் அறிவால் உருவாக்கப்பட்டவை. அவர் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த ஒரு தந்திரமான திட்டத்தை தேர்ந்தெடுத்தார். அதன்படி,  அவர் பாவ் பாஜியுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் விற்கத் தொடங்கினார். இது ஒரு பெரிய வெற்றிய தந்ததோடு, அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் உதவியது. நேச்சுரல்ஸ் ஐஸ்க்ரீம் 2020 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் 135 கிளைகளை கொண்டிருந்தது. தற்போது 15 நகரங்களில் 165 கிளைகள் உள்ளன. அறிக்கைகளின்படி, அவரது ஜூஹு சிறிய கடை அறிமுகமான முதல் ஆண்டில் 5 லட்ச ரூபாய் வருமானம் ஈட்டியது.


நேச்சுரல்ஸின் புகழ்பெற்ற இளநீர் தேங்காய் சுவையானது,  உலகின் முதல் 100 ஐஸ்கிரீம்களில் ஒன்றாக டேஸ்ட் அட்லஸ் பட்டியலிடுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதோடு, 2018 இல் KPMG நடத்திய ஆய்வில் இந்தியாவின் முதல் 10 நம்பகமான பிராண்டுகளில் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் சேர்க்கப்பட்டுள்ளது.