மேற்கு வங்காளத்தில் முன்னாள் முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் புத்ததேவ் பட்டாச்சாரியா. மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் இன்று கொல்கத்தாவில் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவால் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மிகுந்த சோகம் அடைந்துள்ளனர். அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காலமானார் முன்னாள் முதலமைச்சர்:
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு, சுவாசக்கோளாறு பிரச்சினை இருந்து வந்தது. இதன் காரணமாக, அவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
1944ம் ஆண்டு பிறந்த புத்ததேவ் பட்டாச்சார்யா நிமோனியா பாதிப்பு காரணமாக உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவருக்கு மீரான என்ற மனைவியும், சுசேடன் என்ற மகனும் உள்ளனர்.
தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சி:
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சராக மட்டுமின்றி நாட்டின் செல்வாக்கு மிகுந்த இடதுசாரி தலைவராக திகழ்ந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தில் செல்வாக்கு மிகுந்த முதலமைச்சராக திகழ்ந்த ஜோதிபாசுக்கு பிறகு கடந்த 2000ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதலமைச்சராக இவர் பொறுப்பு வகித்தார்.
மேற்கு வங்கத்தில் கடைசியாக இவரது தலைமையில்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. 34 ஆண்டுகாலமாக தொடர்ந்து நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் ஆட்சியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த 2011ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வந்தது.
எளிய வாழ்வு:
பொதுவாக இடதுசாரிகள் எளிமையான வாழ்க்கை வாழ்பவர்கள். எந்தளவு உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மிக எளிமையாக வாழ்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தாலும் புத்ததேவ் பட்டாச்சார்யா இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்தான் வாழ்ந்து வந்தார்.
தனது மறைவுக்கு பிறகு தனது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட வேண்டும் என்று புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட உள்ளது.
தலைவர்கள், தொண்டர்கள் இரங்கல்:
கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியின் மாணவரான இவர் பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட்ட அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பிறகு ஜோதிபாசுவின் ஆட்சியில் துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர், அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து புத்ததேவ் பட்டாச்சார்யா முதலமைச்சராக பொறுப்பேற்றார். புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் 2001 மற்றும் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் அபார வெற்றி பெற்றது.
புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவிற்கு நாட்டின் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அந்த மாநில ஆளுநர் சி.வி.போஸ் உள்ளிட்டோர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.