Milind Deora: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா,  காங்கிரஸில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


காங்கிரசில் இருந்து விலகிய மிலிந்த் தியோரா:


மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணையப்போவதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மூத்த தலைவர் மிலிந்த் தியோரா  அறிவித்துள்ளார்.


இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ”காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நான் ராஜினாமா செய்துள்ளேன். இந்த கட்சியுடனான எனது குடும்பத்தின் 55 ஆண்டுகால உறவை முடித்துக் கொண்டேன். பல ஆண்டுகளாக தங்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காக அனைத்து தலைவர்கள், சக ஊழியர்கள் மற்றும் காரியகர்த்தாக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என மிலிந்த் தியோரா குறிப்பிட்டுள்ளார்.






யார் இந்த மிலிந்த் தியோரா:


காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகன் தான் மிலிந்த் தியோரா. கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்வானார். தொடர்ந்து 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் சிவசேனா தலைவர் அரவிந்த் சாவந்துக்கு எதிராக போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். 2012 மற்றும் 2014ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை இணையமைச்சராக இருந்துள்ளார்.






மும்பை மாநகர காங்கிரஸ் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென, I.N.D.I.A. கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்ரே தரப்பிலான சிவசேனா கோரி வருகிறது. ஆனால், இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மிலிந்த் தியோரா தற்போது காங்கிரசில் இருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள சூழலில், முன்னள் மத்திய அமைச்சர் காங்கிரசில் இருந்து விலகியிருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதோடு, மிலிந்த் தியோரா கட்சியில் இருந்து விலகியதற்கு சிலர் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.