தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு மத்திய அரசு என்ற பதம் தவிர்க்கப்பட்டு ஒன்றிய அரசு என்ற பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், ஒன்றிய அரசு என அழைப்பது குற்றமல்ல என்றும் அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதையே நாங்கள் சொல்கிறோம். அதோடு ஒன்றிய அரசு என்றே அழைத்தோம், அழைக்கிறோர், அழைப்போம் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் இது குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “கழுதை விட்டையில் முன்விட்டையாக இருந்தாலென்ன, பின்விட்டையாக இருந்தாலென்ன!? இந்திய அரசாங்கத்தை மத்திய அரசென்றே அழைக்க வேண்டுமென்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுப்பிய கோரிக்கைக்கு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைப்பேன் என்று பதிலளித்தார்.
இந்திய அரசாங்கத்தை பெயர் மாற்றியோ, அப்படியே அழைப்பதனாலோ என்ன மாற்றம் வந்து விடப்போகிறது?
ஒவ்வொரு அரசியல் செயல் அல்லது அமைப்பிற்கான சோதனையென்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை அது உயர்த்துகிறதா, மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கையைத் தருகிறதா என்பதன் அடிப்படையில்தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அது வறுமையை ஒழித்து, வேலையில்லா திண்டாட்டத்தை, ஊட்டச்சத்துக் குறைபாட்டை சரிசெய்து, சரியான மருத்துவ கட்டமைப்பும் சிறந்த கல்வியையும் தந்து, விலைவாசி உயர்வை குறைத்து, விவசாயிகளின் துயரைப் போக்குகிறதா என்பதில்தான் இருக்கிறது.
அந்த நோக்கத்தில் பார்த்தால், இந்திய அரசை எப்படி அழைக்கிறோம் என்பது இங்கே முற்றிலும் சம்பந்தமேயில்லாதது. மேலும், மத்திய அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் உள்ள வித்தியாசம் கழுதை விட்டையில் முன்விட்டைக்கும் பின்விட்டைக்கும் இடையே உள்ள வித்தியாசம்தான். பாஜக சட்டமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கையும் அதற்கு தமிழக முதலமைச்சரின் பதிலும் இவர்கள் இருவரும் மண்டையில் ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரர்கள் என்பதையே காட்டுகிறது.
தமிழில் இட்ட பதிவை கட்ஜூ டெலீட் செய்து விட்டார்.
மார்க்கண்டேய கட்ஜூ பேஸ்புக் பதிவு