கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
உம்மன் சாண்டி மரணம்:
உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உம்மன் சாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 79. புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். நடப்பாண்டு தொடக்கத்தில் ஜெர்மனியில் இருந்து கேரளம் திரும்பிய அவர், பேசும் திறனையும் 90 சதவீதத்திற்கு மேல் இழந்திருந்தார்.
அதைதொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமடையவே, சிறப்பு சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உம்மன் சாண்டி இன்று காலமானார். அவரின் உடல் கேரளா கொண்டுச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் இரங்கல்:
உம்மன் சாண்டி மறைவு தொடர்பாக கேரள காங்கிரஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “எங்கள் மிகவும் அன்புக்குரிய தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டியின் இழப்பிற்கு நாங்கள் வருந்துகிறோம். கேரளாவின் மிகவும் பிரபலமான மற்றும் ஆற்றல் மிக்க தலைவர்களில் ஒருவரான சாண்டி, தலைமுறைகள் கடந்தும் மற்றும் பலதரப்பு மக்களாலும் நேசிக்கப்பட்டவர். அவரது தலைமையையும் ஆற்றலையும் காங்கிரஸ் குடும்பம் இழக்க நேரிடும்” என்று குறிப்பிட்டுள்ளது. இதைதொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உம்மன் சாண்டியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த உம்மன் சாண்டி?
2004-06 மற்றும் 2011-16 ஆகிய இரண்டு காலகட்டங்களில், உம்மன் சாண்டி கேரள மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரான இவர் 1970ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தனது 27 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக பணியை தொடங்கினார். அதைதொடர்ந்து 11 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த 50 ஆண்டுகளாக சாண்டி தொடர்ந்து தனது சொந்த தொகுதியான புதுப்பள்ளியில் மட்டுமே போட்டியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்று சட்டமன்றத்திற்கு தேர்வானதன் மூலம், 18,728 நாட்கள் சட்டமன்றத்தில் புதுப்பள்ளி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இதன் மூலம் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றினார் என்ற காங்கிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் கே.எம். மணியின் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்தார். உம்மன் சாண்டி தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு முதலமைச்சர்களின் கீழ் நான்கு முறை அமைச்சராகவும், நான்கு முறை மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.