இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான டாக்டர். கே கஸ்தூரி ரங்கனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் அவர் அழைத்து வரப்பட உள்ளார்.


தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக உள்ள கஸ்தூரி ரங்கன்:


நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் கஸ்தூரிரங்கன், தேசிய கல்வி கொள்கை வரைவு குழு தலைவராக இருந்துள்ளார். இவர், இலங்கைக்கு சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.


தற்போது, ​​அவரை விமானம் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. நாராயண ஹ்ருத்யாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ள அவருக்கு நாராயண ஹெல்த் நிறுவனர் டாக்டர் தேவி ஷெட்டி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தற்போது, அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.


இலங்கைக்கு சென்றிருந்தபோது திடீர் மாரடைப்பு:


இந்த செய்தியை உறுதி செய்துள்ள கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அவர் விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரி ரங்கனுக்கு இலங்கையில் மாரடைப்பு ஏற்பட்டது என்பதை அறிந்தேன். இது எனக்கு வருத்தமாக உள்ளது. அவர் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.






அறிவியல், கல்வி ஆகிய இரு துறைகளிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள டாக்டர் கஸ்தூரிரங்கன், இரண்டு துறைகளிலும் ஆற்றிய பங்களிப்பிற்காக நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.


83 வயதான கஸ்தூரிரங்கன், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், கர்நாடக அறிவுசார் ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையில், மாநிலங்களவை உறுப்பினராகவும், கலைக்கப்பட்டுள்ள திட்ட குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


கடந்த 2004ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் 2009ஆம் ஆண்டு வரை, பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தார். தற்போது ராஜஸ்தானின் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார். கடந்த 1940 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் தேதி, கொச்சி எர்ணாகுளத்தில், சி.எம். கிருஷ்ணசுவாமி ஐயர் மற்றும் விசாலாக்ஷிக்கு மகனாகப் பிறந்தார். கஸ்தூரிரங்கனின் முன்னோர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பின்னர், கேரளாவுக்கு குடிபெயர்ந்தார்கள்.