முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் தனது விமானம் 12 மணி நேரம் தாமதமானதால் விமான நிலையமா இல்ல மீன் மார்க்கெட்டா என இண்டிகோ நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனத்தை எடுத்து வைத்துள்ளார்.
இந்திய விமான நிறுவனமான இண்டிகோ சமீப காலமாக ஊழியர் பற்றாக்குறையால் சிக்கி வருகிறது. மேலும் நேற்று வெள்ளிக்கிழமை 1000 விமானங்களானது ரத்துச்செய்யப்பட்டதால் பயணிகள் பலர் விமான நிலையங்களிலேயே பரிதவித்தனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் மன்னிப்பு கேட்டார், இது ரத்து செய்யப்பட்டவர்களின் அடிப்படையில் "மிகவும் பாதிக்கப்பட்ட நாளாகும்". சனிக்கிழமை நெருக்கடி தொடரும் என்றாலும், 1,000க்கும் குறைவான விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.
கிரிக்கெட் வீரர் விமர்சனம்:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மதன் லால் தனது விமானம் 12 மணி நேரம் தாமதமானதால் தனது டிவிட்டரில் வெளியிட்ட கருத்தில் மும்பையிலிருந்து எனது விமானம் 12 மணி நேரம் தாமதமானது. நம் நாட்டில் மக்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. விமான நிலையம் ஒரு மீன் சந்தை போல் இருந்தது" என்று தெரிவித்து இருந்தார்.
நிலைமை எப்போது சீராகும்?
"டிசம்பர் 10 முதல் 15 வரை முழு இயல்புநிலை எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்தவரை மீட்புக்கு நேரம் எடுக்கும் என்று இண்டிகோ எச்சரிக்கிறது" என்று இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். அறிக்கையின்படி, இண்டிகோ தினமும் சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குகிறது.
தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்களால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சிரமத்திற்கு பீட்டர் எல்பர்ஸ் மன்னிப்பு கேட்டார், இந்த நிலைமை பல காரணிகளால் ஏற்பட்டது என்று கூறினார். விமானிகளின் வாராந்திர ஓய்வு தேவையை 12 மணிநேரம் அதிகரித்து 48 மணிநேரமாக உயர்த்தும் புதிய விதிமுறைகளிலிருந்து இண்டிகோவின் நெருக்கடி உருவாகிறது. புதிய விதிமுறைகள் வாரத்திற்கு இரண்டு இரவு தரையிறக்கங்களை மட்டுமே அனுமதிக்கின்றன, இது முன்பு ஆறு முறையிலிருந்து குறைந்துள்ளது. பரவலான ரத்துசெய்தல்களுக்கு "தவறான கணக்கீடுகள் மற்றும் திட்டமிடல் இல்லாமை" என்று இண்டிகோ காரணம் கூறியது.