ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் இன்று காலமானார். இவருக்கு வயது 88. சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.


யார் இந்த நாராயணன் வாகுல்?


வீட்டில் தவறி விழுந்ததை அடுத்து சுயநினைவை இழந்துவிட்டார். இதையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக உயிருக்கு போராடி வந்துள்ளார். செயற்கை சுவாச கருவியின் உதவியோடு அப்போலோ மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தொடக்க காலத்தில் நிதி நிறுவனமாக இருந்து, வங்கியாக ஐசிஐசிஐ உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் நாராயணன் வாகுல். 60 ஆண்டு கால தொழில் வாழ்க்கையில், கே.வி. காமத் உட்பட வங்கியின் பல மூத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார்.


இளம் வயதில் பொதுத்துறை வங்கியின் தலைவரான பெருமை இவரையே சாரும். கடந்த 1981இல் இந்தியன் வங்கியின் தலைவரானார். ராஜீவ் காந்தி பிரதமராக பதவி வகித்த காலத்தில், ஐசிஐசிஐ லிமிடெட் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றார்.


பாலின வேறுபாடுகளை உடைத்தெறிந்த வாகுல்?


கடந்த 1996ஆம் ஆண்டு, தனது பதவியில் இருந்து விலகிய வாகுல், கடந்த 2009ஆம் ஆண்டு வரை, ஐசிஐசிஐ குழுத்தின் தலைவராக வழிகாட்டினார். கடந்த 2010இல் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.


ஐசிஐசிஐ வங்கியில் பாலின வேறுபாடு கடந்து, பெண்களையும் ஊக்குவித்தார். இதனால், மூத்த நிர்நாக பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டனர். இவரால் ஊக்குவிக்கப்பட்ட பெண்கள், ஐசிஐசிஐ வங்கியில் இருந்து சென்று பல வங்கிகளின் மூத்த பொறுப்புகளை அலங்கரித்தனர்.


ஐசிஐசிஐ வங்கியில் இணை நிர்வாக இயக்குநராக பதவி வகித்த கல்பனா மோர்பாரியா, ஜேபி மோர்கன் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா வங்கியின் தலைவரானார். ஐசிஐசிஐ வங்கியில் இணை நிர்வாக இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற லலிதா குப்தே, நோக்கியா மற்றும் அல்ஸ்டாம் நிறுவனங்களின் உலகளாவிய வாரியங்களில் இடம் பெற்றார்.


ஐசிஐசிஐ வங்கியின் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு தலைமை தாங்கிய ஷிகா ஷர்மா, ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியானார். இதேபோல், ஐசிஐசிஐ வென்ச்சர்ஸில் பணியாற்றிய ரேணுகா ராம்நாத், மல்டிபிள்ஸ் ஆல்டர்நேட் அசெட் மேனேஜ்மென்ட் என்ற தனியார் சமபங்கு நிறுவனத்தை தொடங்கி இப்போது நிர்வாக இயக்குநராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.


இதையும் படிக்க: Fact Check: வீட்டில் இருந்து விரட்டப்பட்டாரா மோடி? தீயாய் பரவும் செய்தி உண்மையா?