சமீபத்தில், செய்தி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. Amar Ujala செய்தி நிறுவனத்தின் துண்டு செய்தியில் பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி பேசியதாக சில தகவல்கள் மேற்கொள் காட்டப்பட்டிருந்தது. அதில், "துறவியாவதற்காக அவர் வீட்டில் இருந்து வெளியேறவில்லை. நகைகளை திருடியதற்காக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்தான் நரேந்திர மோடி" என மோடியின் சகோதரர் கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த செய்தியானது உண்மையானதா என்பதை கண்டறிய நம்முடைய எண்ணுக்கு 9049053770 அனுப்பப்பட்டது. ஆனால், நாங்கள் ஆய்வு செய்ததில் வைரலான செய்தித்தாள் கிளிப்பிங் போலியானது என்பது தெரிய வந்தது.


உண்மை என்ன?


கடந்த 2016ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்பட்டதாக துண்டு செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, 2016ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் தேதி வெளியான Amar Ujala பதிப்பை தேடினோம். அதை தேடியதில் குறிப்பிட்ட பதிப்பை கண்டறிந்தோம். ஆனால், துண்டி செய்தியில் குறிப்பிட்டது போல ஒரு செய்தி வெளியாகவில்லை என்பதை தெரிந்து கொண்டோம்.




கீ வேர்ட் சர்ச் செய்து பார்த்ததில் 2016ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் தேதி, ஒரு விளக்கத்தை Amar Ujala செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதில், "பிரகலாத் மோடியை குறிப்பிட்டு அமர் உஜாலா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி பரப்பப்படுகிறது.


இந்த செய்திக்கும் அமர் உஜாலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற பொய்யான செய்திகள் பரப்பப்படுவதை அமர் உஜாலா வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த பொய்யான செய்தி அமர் உஜாலா என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமர் உஜாலா மூலம் குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தகவலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Fact Crescendo செய்தி நிறுவனம் சார்பில் பிரகலாத் மோடியை தொடர்பு கொண்டார்கள். இதுகுறித்து அவர் பேசுகையில், "அமர் உஜாலாவில் வந்த செய்தி என் கவனத்துக்கு வந்ததும், அவற்றின் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்று கேட்டேன்.




ஏனென்றால் நான் யாரையும் சந்தித்ததில்லை. அப்படிப்பட்ட எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லை. அவர்கள் மீது புகார் கொடுக்கிறேன் என்று கூறினேன். பின்னர், இது போலியான செய்தி என ஆசிரியர் விளக்கம் அளித்தார். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்கிறேன் என்றும் என்னிடம் உறுதியளித்தார்.


அவரும் எனக்கு ஒரு எஃப்ஐஆர் நகலை அனுப்பினார். ஆனால், இப்போது அது என்னிடம் இல்லை. ஆனால், இந்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அப்படி ஒரு கருத்தை நான் ஒருபோதும் கூறவில்லை" என்றார்.


முடிவு:


எங்களின் விசாரணையில், வைரலான துண்டு செய்தி போலியானது என்பது தெளிவாகிறது. அமர் உஜாலா இதுபோன்ற தலைப்புடன் ஒரு கட்டுரையை வெளியிடவில்லை. பிரகலாத் மோடி அத்தகைய கருத்தை தெரிவிக்கவில்லை.



பின்குறிப்புஇந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக factcrescendo என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே  திருத்தி எழுததியுள்ளது.