ஆந்திர மாநிலத்தில் முதல்வராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன்மோகன் ரெட்டி. அவரது தந்தை ஒய்.எஸ்.ராஜேசேகர ரெட்டி. அவரும் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பொறுப்பு வகித்தவர். முதல்வராக பொறுப்பு வகித்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஷர்மிளா என்ற சகோதரி உள்ளார்.


கடந்த சில மாதங்களாகவே தனது சகோதரரான ஜெகன்மோகனின் அரசாங்கத்தை ஷர்மிளா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து, ஷர்மிளா கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி (ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதன்முறையாக ஆந்திராவில் பாத யாத்திரையை தொடங்கிய நாள்) தனிக்கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். மேலும், அவரது தந்தையான ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளான ஜூலை 8-ந் தேதி தனிக்கட்சி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தார்.




இதன்படி, ஹைதராபாத்தில் இன்று மாலை 3 மணியளவில் கட்சி தொடக்க விழா நடைபெற உள்ளது. ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா தொடங்கும் இந்த கட்சிக்கு ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் காரணமாக குறைந்த அளவு தொண்டர்களே இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.


கட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஷர்மிளாவும் அவரது தாயார் விஜயம்மாவும் 1 மணியளவில் பேகம்பேடு விமான நிலையத்திற்கு வந்தடைய உள்ளனர். பின்னர் பஞ்சகட்டாவில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். மேலும், இடுபுலுபயத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்கும் நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளார். ஆந்திரா முதல்வரும், அவரது சகோதரருமான முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தனியாக சென்று ராஜசேகர் ரெட்டி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.




ஹைதரபாத்தில் நடைபெற உள்ள கட்சியின் தொடக்க விழாவில் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள் குறித்து ஷர்மிளா விளக்கமாக பேச உள்ளார். மேலும், கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார். புதிய கட்சி தொடக்கம் பற்றி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்த ஷர்மிளா, தனது தந்தை தினசரி 22 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல நலத்திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். அதன் அடிப்படையில் தானும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறியிருந்தார்.  


அதன் அடிப்படையில், ஷர்மிளாவும் கிராமங்கள்தோறும் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு வருகிறார். ஒய்.எஸ்.ஆர். ராஜசேகர் ரெட்டியின் நினைவிடத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டியும், ஷர்மிளாவும் தனித்தனியாக சென்று அஞ்சலி செலுத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி புதியதாக கட்சி தொடங்க இருப்பது அந்த மாநில மக்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.