முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா(Dinesh Mongia) பாஜகவில் இணைந்தார். தலைநகர் டெல்லியில் நடந்த விழாவில் மோங்கியா பாஜகவில் இணைந்தார். இடது கை பேட்ஸ்மேனான மோங்கியா சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த இணைப்பு கவனம் பெறுகிறது.
ஏற்கெனவே மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் ஒரு கிரிக்கெட் வீரர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, அமரீந்தர் சிங்கின் புதிய கட்சி, ஷிரோன்மணி அகாலி தளம் என ஐந்து முனை போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஷிரோன்மணி, பாஜக கூட்டணியில் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 20 இடங்களிலும், எஸ்ஏடி 15 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலால் சிக்கித் தவிப்பதால் பாஜக தனக்கு சாதமான போக்கு இருப்பதாக கருதுகிறது. இந்நிலையில் தான் தினேஷ் மோங்கியாவை தனது கட்சியில் அரவணைத்துக் கொண்டுள்ளது.
ஏற்கெனவே, ஹர்பஜன் சிங் தனது ராஜினாமாவை அறிவித்தார். அவர் காங்கிரஸில் இணைவார் என்று சொல்லப்படும் சூழலில் தினேஷ் மோங்கியா பாஜகவில் இணைந்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்தார். அவருக்கு சீட் ஒதுக்கியது பாஜக. தற்போது அவர் எம்.பி.யாக உள்ளார்.
அதேபோல், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி புகழ் பெற்று அதன் மூலம் இந்திய அணிக்காக தேர்வு செய்யபட்டு சில போட்டிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன். 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகிய இவர், 1987 ஆம் ஆண்டு இந்தியாவிற்காக தனது இறுதிப்போட்டியை விளையாடினார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, அப்போதைய பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
சினிமா, விளையாட்டுப் பிரபலங்கள் ஒரு கட்டத்துக்குப் பின்னர் அரசியலில் ஈடுபடுவது இந்திய அரசியலில் ஒரு சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. அதுவும், தேர்தல் வந்துவிட்டால் இத்தகைய இணைப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.