காலனிய கண்ணோட்டத்தில் இருந்து வெளியே வந்து, சட்டத் தத்துவங்களை இந்திய மயமாக்கல் வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி  எஸ். அப்துல் நசீர் தெரிவித்துள்ளார்.  


அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற வலதுசாரி அமைப்பின்  தேசிய மாநாட்டுக் கூட்டத்தில் 'Decolonisation of the Indian Legal System' என்ற தலைப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.  


தனது உரையில், 


" இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை, காலனித்துவ கண் கொண்டல்லாமல் பண்டைய இந்தியக் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட வேண்டும். 


இன்றைய சட்டம் மற்றும் நீதித் துறையில் காலனித்துவ மனோநிலை நீடித்து வருகிறது. இந்த தத்துவத்தில், மக்கள் தங்கள் உரிமைகளை ஒப்படைத்து விட்டு சமுதாய ஒப்பந்தத்தை உருவாக்கினர். தனிமனிதரைத் தண்டிக்கும் உரிமையும், காக்கும் உரிமையும் அரசுக்கு உரியது. சுருங்கச் சொன்னால், தற்போதைய நீதி பெறப்பட்டதல்ல, அரசால் கொடுக்கப்பட்டது.  




ஆனால், பண்டைய இந்தியாவில் சாமானியர்கள் கூட நீதியைக் கேட்டு பெற முடியும். நீதி தனிமனிதை மையமாகக் கொண்டது.   சட்டத்தின் முன் அனைவரும் சமம். அறம் தவறிய மன்னனுக்கு எதிராக போராடும் வாய்ப்பு அனைவருக்கும் இருந்தது. இன்றைய நீதிமன்ற உரையாடல்களை கவனியுங்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பின்பற்றப்பட்ட 'மை லார்ட்' என்ற சொல்லை இன்றும் பயன்படுத்துகிறோம். நீதியை குனிந்து வளைந்து கேட்க வேண்டிய சூழலில் தான் சாமானியர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார். 


"ஒருவர் சிறந்த வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக பிறப்பதில்லை. முறையான கல்வி மற்றும் மேலோங்கிய சட்ட மரபுகளினால் மட்டுமே சட்ட நிபுணம் பெற முடியும். மனு, கௌடில்யா, பிருஹஸ்பதி, நாரதர், யாக்யவல்கியர் போன்ற பண்டைய கால ஆளுமைகளை தொடர்ந்து புறக்கணிப்பது இந்திய அரசியலமைப்பின் நோக்கங்களை சீர்குலைக்கும் செயல்.  இந்தியத் தத்துவங்கள் நமக்கு அளித்துள்ள நெறி முறைகளையும் அதன் புனிதம் குறையாமல் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.   




இந்தியாவின் நீதித்துறை மிகவும் தொன்மையானது. அர்த்தசாஸ்திரம் (400 கிமு) மற்றும் 100 கிபி இலிருந்து மனுதரும சாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா நிர்வகிக்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான வெளிநாட்டு படையெடுப்பு மற்றும் அந்நியர்களின் ஆதிக்கம் காரணமாக  இந்திய நீதித்துறை பல்வேறு சிதைவுகளுக்கு உள்ளானது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்த போதிலும், இந்திய நீதித்துறை பிரித்தானிய இந்தியாவில் நிறுவப்பட்ட ஆங்கில சட்ட அமைப்பின் தொடர்ச்சியாகவே உள்ளது. காலனித்துவ மனநிலை முடிவுக்கு வரவில்லை" என்று தெரிவித்தார்.